மோடி ஓரிரவு தங்கியதால் படு பிசியாகி விட்ட கேதார்நாத் குகை!

மோடி ஓரிரவு தங்கியதால் படு பிசியாகி விட்ட கேதார்நாத் குகை!

மோடி பிரதமரான பின்னர் குஜராத்தில் பிர்மாண்ட படேல் சிலையை திறந்து அதை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்ரி விட்டார். அதே சமயம் மோடி டீ விற்றதாக சொல்லப்படும் வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் கூட ஒரு வகையில் சுற்றுலா தலமாகி விட்டது. இந்த வரிசையில்  கடந்த மாதம் கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தங்கி தியானம் செய்த குகை தேசிய அளவில் ஏராளமானோரின் கவனத்தைப் பெற்று ஏகப்பட்ட டூரிஸ்ட்டுகளை கவர்ந்திழுத்து வருகிறதாம் .

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் கேதார்நாத் கோயிலுக்கு அருகே அமைந்திருந்த தியானக் குகையில் மோடி தங்கி தியானம் செய்த போது அந்த செய்தி நேரடி ஒளிப்பரப்பாக  அனைத்து ஊடகங்களிலும் பரவியது. மேலும் அந்த தியானக் குகை அறையில் தங்குவதற்கான வழிமுறை களும் விளக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து இதன் மூலம் குகை அறையில் தங்கி தியானம் செய்ய ஏராளமான பக்தர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இந்த அறையில் தங்கியிருக்க ஆன்லைன் மூலம் அன்றாடம் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக அந்த தியானக் குகையில் தியானம் செய்வதற்காக ஜூலை மாதம் முழுவதும் அறை முன் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல நாட்களுக்கு முன் பதிவு முடிந்துவிட்டது என்கிறார் கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் லிமிடட் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.எல். ராணா.

இதற்காக ஜிஎம்விஎன் இணையதளத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டு, தியானக் குகையை முன்பதிவு செய்கிறார்கள்.

மோடி தியானம் செய்து சென்ற பிறகு, ஒரு நாள் கூட தியானக் குகை காலியாக இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

தற்போதிருக்கும் இந்த குகைக்கு அருகே மேலும் இரண்டு தியானக் குகைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு குகை அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும் இரண்டு தியானக் குகைகள் அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த தியானக் குகை அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், மோடி தங்கிச் சென்ற பிறகுதான் அதுபற்றி பக்தர்களுக்குத் தெரிய வந்துள்ளது. குகைக்குள் தியானம் செய்தபடி இருக்கும் மோடியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரலானதைத் தொடர்ந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட குகையைப் பார்க்க விருப்பம் தெரிவிக்கின்றனர்.

கேதார்நாத்தில் பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டதுடன், பிரதமர் மோடியின் வருகையும் சேர்ந்து, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அது மட்டுமா? மோடியின் வருகைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாகவும், கடந்த ஆண்டு முழுக்கவே இந்த கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 7,32,000 ஆக இருந்த நிலையில், மோடி வந்து சென்ற கடந்த 50 நாட்களிலேயே கேதார்நாத் கோயிலுக்கு 7,62,000 பேர் வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கிறது புள்ளி விவரம்.

2012ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக ஏராளமான உள் கட்டமைப் புகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 2015க்குப் பிறகுதான் ஓரளவுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!