December 2, 2021

மோடிக்கு செல்வாக்கு! – சர்வே ரிசல்ட் எல்லாம் பொய் – காங்கிரஸ் சொல்லுது!

நம் உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் மோடி குறித்து பேசினால் அதிருப்தியைத்தான் வெளிக் காட்டுகிறார்கள் ஆனால் அவ்வப்போது வெளியாகும் சில சர்வே ரிசல்ட் என்னவோ மோடிதான் அடுத்தும் பிரதமராவார் என்று ஆருடம் சொல்லுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகை யில்தான் பிரபல் இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக நாடு முழுவதும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் தற்போது, மோடியின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக 47.6 சதவிகிதத்தினரும், நம்பிக்கை குறைந்துள்ளதாக 37.3 சதவிகிதத்தினரும், அதே நிலையில் நீடிப்பதாக 15.1 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அதிலும் தங்கள் குடும்பத்துக்குச் சிறப்பான எதிர்காலத்தை மோடி அளிப்பார் என்று நம்புவதாக 50.3 சதவிகிதத்தினரும், நம்பிக்கை இல்லை என்று 35.9 சதவிகிதத்தினரும், தெரியவில்லை என்று 13.7 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். அதே சமயம், ஒட்டு மொத்த இந்தியாவில், தெலங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் மோடியின் மீதான நம்பிக்கை குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் மோடியை அதிகமானோர் ஆதரிக்கின்றனர்.

ராஜஸ்தான் (64), ஹரியானா (62), கர்நாடகா (61), ஜார்கண்ட் (61), ஆகிய மாநிலங்கள் அதிக நம்பிக்கை தெரிவிப்பதாகவும், தெலங்கானா (37), கேரளா (27), ஆந்திரா (26), தமிழ்நாடு (24) ஆகிய மாநிலங்கள் குறைவாக நம்பிக்கை தெரிவிப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே இந்த கருத்துக் கணிப்பை பொய் தகவல் பரப்பும் பாஜகவின் வேலை என்றும் அந்த வீண் வேலை பலன் தராது என்றும் காங்கிரஸ் கட்சி உதாசினப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.