September 27, 2022

அடேங்கப்பா.. எங்க திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவு- மோடி ஹேப்பி

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி டெலிவி‌ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருப்பதாக அப்போது கூறிய அவர், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.இதையொட்டி, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றுவதிலும், வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.

modi jan 1

இந்த நிலையில், புத்தாண்டை யொட்டி நேற்று பிரதமர் மோடி டெலிவி‌ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் தன் பேசியதிலிருந்து:

இந்தியாவில் நிழல் பொருளாதாரமாக கறுப்புப் பணப் புழக்கம் இருந்தது. அதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து சாமானியர்களை அது பாதித்துள்ளது. தற்போது அதற்கு எதிரான நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது.ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு, எந்த அரசுமே செய்யத் துணியாத கடினமான முடிவு. மக்களின் ஆதரவில்லாமல் இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ஆனால், உலக நாடுகள் எதிலுமே காணாத முன்னுதாரணமாக இந்தியாவில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது.

கறுப்புப் பணத்துக்கும், ஊழலுக்கும் எதிராக அரசுடன் ஒருங்கிணைந்து மக்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது ஒளிமயமான தேசத்தின் புதிய விடியலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.பதுக்கல்காரர்களுக்கு எச்சரிக்கை: ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கி அதிகாரிகள் சிலரின் உறுதுணையுடன் சில முறைகேடுகள் அரங்கேறியதை மறுக்க இயலாது. அதேவேளையில், பொதுமக்களின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரவு-பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்த லட்சக்கணக்கான வங்கி ஊழியர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

நாட்டின் நேர்மையான குடிமக்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கருப்புப் பணத்தை பதுக்க நினைப்பவர்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதிலும் அதே உறுதியுடன் அரசு செயல்படும்.

மக்களுக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வீட்டுக் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு வட்டித் தொகையில் சிறப்புத் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.9 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 4 சதவீதமும், ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3 சதவீதமும் வட்டியிலிருந்து தள்ளுபடி வழங்கப்படும். இதைத் தவிர்த்து ஊரகப் பகுதிகளில் வீடு கட்ட ரூ.2 லட்சம் வரை பெறப்பட்ட கடனுக்கு வட்டித் தொகையில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

ரூபாய் நோட்டு நடவடிக்கை வேளாண்மையை பாதித்து விட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கி யுள்ளனர் நமது விவசாயிகள். இந்த ஆண்டு ரபி பருவத்தின் விளைச்சல், கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் உயர்ந்திருப்பதே அதற்குச் சான்று. அவர்களது நலன் காக்கும் விதமாக ரபி பருவ சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க் கடனில் 60 நாள் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை விவசாயிகள் வட்டியை முழுமையாக செலுத்தியிருந்தாலும்கூட, குறிப்பிட்ட அந்தத் தொகை அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.இதைத் தவிர, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 3 கோடி விவசாயக் கடன் அட்டைகள் “ரூ – பே’ அட்டைகளாக மாற்றித் தரப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தற்போது ரூ.1 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அந்த வரம்பு ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.இதன் மூலம், தொழில் வளர்ச்சி மேம்படுவதுடன், உற்பத்தியும் அதிகரிக்கும். இத்தகைய சலுகைகள் புதிய தொழில்முனைவோரை உருவாக்க வழிவகுக்கும்.இது மட்டுமன்றி, மூத்த குடிமக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக, ரூ.7.5 லட்சம் வரை செய்யப்படும் டெபாசிட்டுக்கு 8 சதவீத வட்டித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மகப் பேறு கால உயிரிழப்பைக் குறைக்கும் பொருட்டு கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து, தடுப்பூசி மற்றும் பிரசவ கால செலவினங்களை ஈடு செய்ய முடியும். முதல்கட்டமாக ரூ.4 ஆயிரமும், மீதமுள்ள தொகை அதன் பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்” என்றார் பிரதமர் மோடி.