October 19, 2021

டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது ஊழலுக்கு எதிரான போர்!- மோடி பேச்சு

பிரதமர் நரேந்திரமோடி வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரை நிகழ்த்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் நிகழ்த்திய உரையின் போது, “வசந்த பஞ்சமி, ஹோலி மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் மக்களிடையே சகோதரத்துவத்தையும், அமைதியையும் உருவாக்குகின்றன. குளிர் காலம் விடை பெற்று தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் எனது உரையின் மீதான மக்களின் கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

‘இஸ்ரோ’வை பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. எனவே அதைப்பற்றி கூற விரும்புகிறேன். பிப்ரவரி 15-ந் தேதி இந்திய வரலாற்றில் மிகவும் பெருமையான நாளாக திகழ்ந்தது. மங்கள்யான் வெற்றிக்கு பிறகு ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை விஞ்ஞானிகள் விண்ணில் நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இது ‘இஸ்ரோ’ மகுடத்தில் மற்றொரு சாதனையாகும்.

இது இந்தியாவின் உலக சாதனையாகும். இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 38வது வெற்றிகரமான செயல்பாடாகும். உலகமே வியக்கும் வகையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டவைகளில் கார்டோ சாட்-2டி இந்தியாவின் செயற்கை கோளாகும். அது நமது விவசாய நண்பர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் 104 செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நாட்டின் குடிமகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.

நமது சமூகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறி வருகின்றனர். பணமில்லா வர்த்தகம் செய்வோருக்கு இது வரை 150 கோடிக்கும் அதிகமாக சன்மானங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மனித வளர்ச்சியில் அறிவியலின் பங்கு அதிக அளவில் உள்ளது. அதற்கு ஒரு போதும் முடிவே இல்லை. எனவே அறிவியலின் சிந்தனைகள் இளைஞர்களிடம வளர வேண்டும். நமது நாட்டுக்கு அதிக அளவில் விஞ்ஞானிகள் தேவை. மனிதர்களின் தேவைகளை தீர்ப்பதில் அறிவியலின் பங்கு அதிக அளவில் உள்ளது.

சமீபத்தில் நாம் இடை மறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இது ராணுவதுறையில் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இது போன்ற திறன் கொண்ட தொழில்நுட்ப ஏவுகணைகள் 4 அல்லது 5 நாடுகளில் மட்டுமே உள்ளன. ஆனால் இன்று அதை நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியுள்ளனர். இதன் மூலம் எதிரிநாட்டு ஏவுகணையை தடுத்து நிறுத்தி வெற்றி பெற முடியும்.

100-க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் பரிசு பெற்றுள்ளனர். இதில் அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். பரிசு தொகை பெற்றவர்களில் 15 முதல் 65 வயது வரை உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பலர் பலன் அடைந்துள்ளனர். தூதர்களாகவும் ஆகியுள்ளனர்.

எனவே, இந்த இயக்கத்தின் தூதுவர்களாக மாறும்படி கடிமக்களை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஊழல் மற்றும் கருப்பு பண ஒழிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஊழலுக்கு எதிரான போர் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

விவசாயம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து இந்த ஆண்டு 2700 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர். விவசாய நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

துவரம் பருப்பில் புரோட்டீன் அதிக அளவு உள்ளது. இந்த ஆண்டு விவசாயிகள் 2900 லட்சம் ஹெக்டேரில் துவரம்பருப்பு பயிரிட்டுள்ளனர். எனது கோரிக்கையை ஏற்று அதிக அளவு உற்பத்தி செய்துள்ளதற்காக அவர்களை வாழ்த்தி பாராட்டுகிறேன்.

குடிமகன் சாதனைகள் நிகழ்த்தும் போது நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்றனர். அத்தகைய சாதனையை ரியோ டீ ஜெனீரோவில் மாற்றுதிறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தினர்.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்கள் பாகிஸ்தானை வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

அறிவியல் மற்றும் விளையாட்டு துறைகளில் பெண்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டியில் நமது பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மார்ச் 8-ந் தேதி சர்வதேச பெண்கள் தினமாகும். சமூகத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சம அளவில் பலம் பெறும்வகையில் அந்நாளை கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.