February 8, 2023

இந்த நாட்டு மக்கள் குறித்த கடுகளவு அக்கறை கூட இல்லாதவர்தான் மோடி!

ண நீக்க நடவடிக்கை நியமானதா, சட்டபூர்வமானதா என்று பதியப்பட்ட பல்வேறு வழக்குகளில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் குழுவில் நான்கு பேர் இது சட்டபூர்வமானதுதான் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து கலந்தாலோசித்துதான் இந்த நடவடிக்கை வந்திருக்கிறது, என்று சொல்லி இருக்கிறார்கள். பழைய கரன்சி நோட்டுகளை பரிமாற்றம் செய்வதற்கு விதிக்கப்பட்ட வரம்புமே கூட சரிதான் என்று தீர்ப்பு கூறுகிறது. ஒரே ஒரு நீதிபதி மட்டும் மெஜாரிடி கருத்தில் இருந்து மாறி இருக்கிறார். நேரடியாக பண நீக்கம் அறிவித்தது சட்ட விரோதம் என்றும், தேவைப்பட்டால் இதனை ஒரு நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் நிறைவேற்றி இருந்திருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்தத் தீர்ப்பில் பெரிய ஆச்சரியம் எனக்கில்லை. பண நீக்கம் செய்வதற்கும், அதை அறிவிப்பதற்கும் மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. சொல்லப் போனால் மாற்று நிலைப்பாடு எடுத்திருந்த நீதிபதியின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. பண நீக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற வேண்டி இருந்தால், அதனை ரகசியமாக மட்டுமே செய்திருக்க முடியும். யாருக்கும் தெரியாமல் ராத்திரியோடு ராத்திரியாக நாடாளுமன்றத் தீர்மானம் நிறைவேற்ற இயலாது. எனவே, மெஜாரிடி நீதிமன்றத் தீர்ப்புடன் ஒத்துப் போகிறேன்.

அதே நேரம் எனக்கு இருக்கும் பிரச்சினை பணநீக்கம் சட்டபூர்வமானதா இல்லையா என்பதல்ல. எனக்கு இருக்கும் பிரச்சினைகள் இரண்டு: ஒன்று, அந்த நடவடிக்கை தனது நோக்கங்களை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறது என்பது. போலி கரன்சி நோட்டுகளை ஒழிப்பது மற்றும் கறுப்புப் பொருளாதாரத்தை வலுவிழக்க வைப்பது – இவை இரண்டும்தான் அறிவித்த நோக்கங்கள். Stated objectives. அதில் எந்த அளவு வெற்றி அடைந்திருக்கிறோம், என்பது பற்றிய தெளிவே இன்று வரை நமக்கில்லை. இது குறித்து நான் பல முறை எழுதி இருக்கிறேன். ++

இரண்டு, அந்த நடவடிக்கை ஏற்படுத்திய பாதகங்கள் என்னென்ன? பண நீக்கம் ஊரகப் பொருளாதாரத்தை அடித்துத் துவைத்துப் போட்டது. கோடிக்கணக்கான குடிசைத் தொழில்கள் நசிவுற்றன. லட்சக்கணக்கான சிறு குறு தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள். பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியத்துக்கும் கஷ்டத்துக்கும் உள்ளானார்கள். 2017 முதல் இந்தியாவின் ஜிடிபி சரிவுற ஆரம்பித்தது இன்று வரை சரியாகவில்லை.

இவை எல்லாமே மேலாகவே நமக்குத் தெரிந்த விஷயங்கள். பண நீக்கம் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் குறித்து இன்னமும் யாருக்கும் தெரியாது. மத்திய அரசுக்குக் கூடத் தெரியாது என்று நினைக்கிறேன். காரணம் இது குறித்து எந்த விதமான அதிகாரபூர்வமான ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை. தரவுகள், data, அறிக்கைகள் என்றாலே மோடிக்கும் பாஜகவினருக்கும் கசப்பாக இருக்கும் என்பதால் எந்த சர்வேயும் நடக்கவில்லை. பயன்கள் என்று பார்த்தால் பொருளாதாரம் மின்னணுமயமாதலை வேகப்படுத்த பண நீக்கம் ஓரளவு உதவி இருக்கிறது. PayTm போன்ற நிறுவனங்கள் கொழிக்க உதவியது. இப்படி ஓரிரு பயன்கள் இருந்தன.

ஆனால் கார்ப்பரேட் மேலாண்மையில் Cost-Benefit Analysis என்று ஒன்று இருக்கிறது. ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமெனில் அதற்குக் கிடைக்கும் பலன்கள் திட்டத்துக்கு ஆகும் செலவுக்கு நியாயம் செய்வதாக இருக்க வேண்டும். ஒரு பத்து கோடி ரூபாய்க்கு நீங்கள் வண்டி வாங்க ஷோ ரூமுக்குப் போகிறீர்கள். அந்தப் பணத்தை கொடுத்து ஒரு மாருதி கார் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டது. அதாவது ஒரு கார் வாங்கியாகி விட்டது. ஆனால் அதற்கு அநியாய விலை கொடுத்திருக்கிறீர்கள். எனவே இந்தப் பரிவர்த்தனை ஒரு மூடத்தனமான ஒன்று என்றுதான் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சொல்வார்கள். சுற்றி இருப்பவர்கள் உங்களை கலாய்ப்பதை தவிர்க்கவே முடியாது. இதுதான் cost-benefit analysis என்று சொல்வது.

பண நீக்கத்தைப் பொருத்த வரை நோக்கங்கள் ஓரளவுக்கு நிறைவேறி இருந்திருக்கலாம். கொஞ்சம் போலி நோட்டுகள் ஒழிந்திருக்கலாம். கொஞ்சம் கறுப்புப் பொருளாதாரம் நசிவுற்று இருக்கலாம். ஆனால் அதற்குக் கொடுத்த விலை பூதாகரமானது. ஓரிரு சதவிகிதம் பேர் செய்து வந்த தவறுகளுக்கு 95 சதவிகிதம் பேருக்கு தண்டனை கொடுத்தோம். நோக்கம் நல்லதா, நோக்கம் நிறைவேறியதா என்பதையெல்லாம் விட இந்த திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசு மூச்சுக் கூட விடவில்லை என்பதுதான் ஆனக்கு அதிர்ச்சி அளித்த விஷயம். இன்று வரை ஒரு சர்வே இல்லை; ஒரு வெள்ளை அறிக்கை இல்லை. ஒரே ஒரு வருத்தம் கூட இல்லை.

அதாவது இந்த நாட்டு மக்கள் குறித்த கடுகளவு அக்கறை கூட இல்லாதவர்தான் மோடி என்பதை அவர் நமக்கெல்லாம் தெரிவித்த தருணம் அது. ஒரு திட்டத்தை அறிவிப்பேன்; அதன் சாதக பாதகங்கள் குறித்து கண்டுக்கவே மாட்டேன். அதற்குப் பின் அடுத்த திட்டத்தை அறிவிப்பேன்; அதன் விளைவுகள் பற்றியும் கண்டுக்காமல் கடப்பேன். இப்படித்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடி செயல்பட்டு வருகிறார். அதற்கான டிரெய்லர்தான் பண நீக்கம். மோடியின், பாஜகவினரின் தேச பக்தி என்பது கொடி, கீதம் போன்ற சின்னங்களுக்கு கொடுக்கும் tokenism மட்டும்தான்; உண்மையான தேச பக்தி தேசத்தின் மக்கள் மீதும், அவர்கள் படும் கஷ்டங்கள் மீதும் அக்கறை கொள்வதுதான். அந்த உண்மையான தேச பக்தி இவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லை என்று தேசத்துக்கு இவர்கள் அறிவித்த தினம்தான் பண நீக்கம்.
அதை தெளிவுபடுத்துவதற்கு எங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரும் தேவையில்லை.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்