பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27லிருந்து 12 ஆக குறைப்பு- நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

நம் நாட்டின் சுப்ரீம் சேமிப்பு பேங்க் எனப்படும் ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பான விவகாரத்தில்தான் இதற்கு முன் இருந்த ஆளுநர் உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் மோதலாக மாறியதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது. குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கூடவே நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் லாபத்தை அதிகரிக்கும் விதமாக நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக  டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன.தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும். 8 வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு நிகரான வட்டிச் சலுகைகளை அளித்து வருகின்றன.வீட்டுக் கடனுக்கு ரூ.3,300 கோடி கடன் உதவி அளிக்கப்படும்.

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும்.வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது, ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் வசூலில் சாதனை படைத்துள்ளோம்.1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது, 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகிறது. சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை. ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இதே போல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும்.வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

செலவினங்களைக் குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.