September 27, 2021

பொதுவான சிவில் சட்டம்! – பா.ஜ. அரசு மீண்டும் முயற்சி

அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது பா. ஜ. க.வின் விருப்பம். இதை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவோம் என அந்தக் கட்சி, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது.ஆனால் 1998–ம் ஆண்டு, 1999–ம் ஆண்டு, தற்போது கடந்த 2014–ம் ஆண்டு, பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுடன், இந்த பொது சிவில் சட்ட பிரச்சினையையும் கிடப்பில் போட்டது.

law july 3

அதே நேரத்தில் பொது சிவில் சட்டம் என்பது பாரதீய ஜனதா மற்றும் அதன் தாய் அமைப்பான சங் பரிவாரத்துக்கும் பிடித்தமான விஷயம். எப்படியாவது இதை அமல்படுத்தி விட வேண்டும் என்று அவை விரும்புகின்றன.இந்த நிலையில் இது குறித்து ஆராயுமாறு மத்திய சட்டக் கமிஷனை பா.ஜ. கூட்டணி அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் விவாகரத்து விவகாரம் குறித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தபோது, ‘‘இந்த நடைமுறைப்படி விவாகரத்து வழங்குவது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பது பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பாக இது தொடர்பாக பொது அரங்கிலும், கோர்ட்டிலும் விரிவான விவாதங்கள் நடத்த வேண்டும்’’ என கூறியது.இப்படிப்பட்ட நிலையில், அனைத்து தரப்பினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி சட்டக் கமிஷன் ஆராயுமாறு மத்திய அரசு கேட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா ஏற்கனவே கருத்து தெரிவித்தபோது, ‘‘இந்த விவகாரத்தை மத்திய சட்டக் கமிஷனின் ஆய்வுக்கு விடலாம். இதில் ஒரு முடிவு எடுப்பதற்கு, பல்வேறு தனிநபர் சட்ட வாரியங்களுடனும், சம்மந்தப்பட்ட அனைவருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்படும். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் ஆகும்’’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது, ‘‘நமது அரசியல் சாசனத்தின் முகவுரையும், அரசியல் சாசனத்தின் பிரிவு 44–ம், ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் இதற்கு விரிவான ஆலோசனை தேவைப்படுகிறது. ஒரு நாளில் அல்லது 2 நாளில் இதில் முடிவு எடுத்து விட முடியாது’’ எனவும் கூறினார்.இந்த நிலையில் தற்போது அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி சட்டக் கமிஷனை ஆராயுமாறு மத்திய அரசு கேட்டிருப்பது இதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இந்த விவகாரத்தை சட்ட கமிஷனின் ஆய்வுக்கு மத்திய அரசு விட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு இத்தகைய தந்திர உபாயங்களில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு சற்று முன்பாக இந்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறீர்கள்?

இதில் அரசியல் கட்சிகளிடமும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், இந்த விவகாரத்தை சட்ட கமிஷனிடம் விடுவது அல்ல பிரச்சினை. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் ஒருமனதான ஆதரவையும் பெறுவதுதான் முக்கியம்”என்று அவர் கூறினார்.