தமிழ்நாட்டில்தான் ஆன்லைன் மோசடி அதிகம்!- மோடி அரசு தகவல்!

இது கடந்த வாரம் நடந்த சம்பவம் :நம்ம சென்னையைச் சேர்ந்த பிரியா அகர்வால் என்ற கல்லூரி மாணவி சவுகார்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களை சந்திப்பதற்கு வடபழனி சென்றுள்ளார். அங்கிருந்து செல்போன் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பிரியாணிக்கான தொகையான 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு, விவரங்களை கூறியுள்ளார். அதில் பேசிய நபர், ரூ.76 சிறிய தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பிச்செலுத்த முடியாது என தெரிவித்து. நீங்கள் ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள், மொத்தமாக ரூ.5 ஆயிரத்து 76ஆக திருப்பி செலுத்திவிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி அந்த மாணவி ரூ.5 ஆயிரத்தை வாடிக்கையாளர் சேவை அதிகாரி சொன்ன வங்கிக் கணக்குக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளார். சிறிதுநேரத்தில் சேவை மையத்தில் இருந்து மாணவி பிரியாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தற்போது நீங்கள் அனுப்பியதாக சொன்ன தொகை எங்களுக்கு வரவில்லை, மீண்டும் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அதனையும் நம்பி அனுப்பியுள்ளார் மாணவி பிரியா.

அந்தத் தொகையும் வரவில்லை என மீண்டும் பரிவர்த்தனை செய்யுங்கள் என சேவை மையத்தில் இருந்து பேசியுள்ளனர். மீண்டும் மீண்டும் இதே போன்று 8 முறை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மொத்தத் தொகை ரூ.40 ஆயிரம். அவர் அனுப்பிய தொகை எதுவும் வங்கி கணக்கில் திரும்ப வராததை உணர்ந்த மாணவி தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி என்பதால் இந்தப் புகாரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கும்படி அவரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். தன்படி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரியா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிரியா பணம் செலுத்திய வங்கிக் கணக்கு, வாடிக்கையாளர் சேவை பிரிவு செல்போன் எண் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தெரிய வந்த பின்பு, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வோர் அச்சத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், 2016-17ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 31 கோடி ரூபாய் பறிகொடுத்து ஹரியானா 3வது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 644 ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தொழில் நுட்பத்தை அறியாத, 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடமே அதிகளவு ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. தமிழக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிரிவு, ஆன்லைன் மோசடி குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் அதிகளவு புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

தொலைபேசியில் தொடர்புகொண்டு யாரேனும் வங்கி விவரங்களை கேட்டால் தெரிவிக்க கூடாது, வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி வழியே கணக்கு விவரங்களை கேட்பதில்லை. ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கச் செல்லும்போது தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்பதை உற்று நோக்க வேண்டும், ஏ.டி.எம். இயந்திரத்தில் அட்டையை செலுத்தும் முன்பு அதில் ஏதும் ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். மேலும், நெட் பேங்கிக் மற்றும் ஏ.டி.எம். அட்டைகளின் ரகசிய எண்ணை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும், என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.