June 21, 2021

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கான விலை நிர்ணயம்- மத்திய அரசு உத்தரவு.

நாடெங்கும் இன்னும் தனி ஆட்சி செய்து கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துடனும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு தனியார் மருத்துவ மனைகள் தடுப்பூசி என்ற பெயரில் நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியாக தற்போது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விற்பனை செய்வதற்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ

தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி ரூ.789-க்கும், கோவாக்சின் முதல் தவணை ரூ.1,410-க்கும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரூ.1,145-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் எந்தெவொரு தனியார் தடுப்பூசி மையம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசிக்கும் அதிகபட்ச விலை அவற்றின் உற்பத்தியாளர்கள் அறிவித்த விலையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் தடுப்பூசி மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலையை தாண்டக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.