ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் – அரவிந்த் பனகாரியா!

ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் –  அரவிந்த் பனகாரியா!

ரிசர்வ் வங்கின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணிய சாமியின் தொடர் அவதூறுகளை அடுத்து, இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார்.

rbi july 11

இந்நிலையில் ஆர்.பி.ஐ. புதிய கவர்னராக பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகளின் தீவிர ஆதரவாளரும், நிதி ஆயோக் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக புதிய கவர்னர் பதவிக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.பி.ஐ., வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஆர்பிஐ துணை கவர்னர் உர்ஜித் படேல் உட்பட பலருடைய பெயர்கள் பரிசீலனையில் உள்ளன என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் தகவல் :

இந்த இந்திய ரிசர்வ் வங்கி 01 ஏப்ரல் 1935 நிறுவப்பட்டது. 1926ல் ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில்தான் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு படி இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படத் தொடங்கி தற்போது மும்பையை தலைமை இடமாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது

சுதந்திரத்திற்குப் பின் 01 ஜனவரி 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தேசியமயமாக்கப்படுவதற்கு முன் ஜீன் 1948 வரை பாகிஸ்தானிற்கு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி இந்தியாவின் தலைமை வங்கியாகவும், வங்கிகளின் தலைமை நிர்வாகியாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகளை கட்டுப்படுத்துபவராகவும், கண்காணிப்பாளராகவும் இருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தியாவின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுகளையும், தன் கருத்துக்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் தெரிவித்து, இந்தியாவின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நேரடியாக பங்கெடுக்கிறது.

1969 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டத்தின் படி 19 ஜீலை 1969 அன்று இந்தியாவின் 14 மிகப்பெரிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதே போல் 1980ல் மேலும் ஆறு பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் இந்தியாவின் 91% வங்கிச் சேவை அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. இதனால் ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவம் மேலும் கூடியது.

இந்தியாவின் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, ஜிடிபி மற்றும் பணவீக்கத்தை கண்கானிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மென் போன்ற சேவைகளை வழங்குவது என்று பல முக்கியமன பணிகளை செய்து வருகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களை கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும் செல்லாது என்று தீர்மானிப்பது போல பல தரப்பட்ட நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளையும் செய்து வருகிறது.

புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டு மொத்த கடன் அளவுகள் மற்றும் அதற்கான வட்டிவிகிதங்களை நிர்ணயிப்பது, கேஒய்சி விவரங்களை சரி பார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நிய செலாவணிகள் போன்றவைகளை கவனிக்கிறது.

Related Posts

error: Content is protected !!