September 18, 2021

மோடியின் கேபினட் கூட்டல் + கழித்தல் லிஸ்ட்!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

modi july 5

ஏற்கெனவே அமைச்சரவையில் 64 பேர் உள்ளனர். அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற நிலையில் இன்று 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:

புதிய அமைச்சர்கள் 19 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். சுஷ்மா ஸ்வராஜ் விழாவில் கலந்து கொள்ளவில்லை இருப்பினும் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னால் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தயவு செய்து இதை தலைப்புச் செய்தி ஆக்காதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

19 புதிய அமைச்சர்கள் பட்டியல்:

முதலாவதாக பிரகாஷ் ஜவடேகர் பதவியேற்றுக் கொண்டார். அவர் இதுவரை தகவல், ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், நாடாளுமன்ற விவகாரத்துறை தனி பொறுப்பு வகித்துவந்தார்.

அவரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் பகான் சிங் குலஸ்தே, டார்ஜிலிங் எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா, பிஜாபூர் எம்.பி. ரமேஷ் சந்தப்பா ஜிகஜிநாகி, டெல்லி பாஜக தலைவரும் ராஜஸ்தான் மாநில எம்.பி.யுமான விஜய் கோயல், இந்திய குடியரசு கட்சி (என்டிஏ கூட்டணியில் உள்ளது) எம்.பி. பந்து அதாவாலே, அசாம் எம்.பி. ராஜன் கோஹெய்ன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து அனில் மாதவ் தவே, குஜராத் பாஜக தலைவர் பார்சோத்தம் ரூபாலா, மகேந்திரநாத் பாண்டே, உத்தரகாண்ட் எம்.பி. அஜய் டம்டா, ஷாஜன்பூர் எம்.பி. கிருஷ்ணராஜ், மனுஷ் மந்தாவியா, அப்னா தல் தலைவர் அனுப்பிரியா படேல், ராஜஸ்தான் எம்.பி. சி.ஆர்.சவுத்ரி, நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி, துலே எம்.பி. சுபாஷ் பாம்ரே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

5 பேர் நீக்கம்:

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ரசாயன மற்றும் உர துறை இணை அமைச்சர் நிஹல்சந்த் மேக்வால், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதீரியா, நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வர் லால் ஜாட், பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் மன்சுக்பாய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி.பாஸ்வா, எம்.கே.குந்தாரியா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.