December 1, 2021

சாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்! – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்திலும் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதை அடுத்து கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடந்தது. அவ் விழா மேடை அண்ணா அறிவாலயம் போன்று வடிவமைக்கப் பட்டு இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் ‘சூரியன் மறைவதில்லை’ புத்தகத்தை சோனியா வெளியிட ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அனைவருக்கும் வீர வாள் பரிசளிக்கப்பட்டது. கலைஞரின் சிலையை வடித்த சிற்பி தீனதயாளனுக்கு ஸ்டாலின் கணையாழி அணிவித்தார்.

தொடக்கத்தில் வரவேற்புரை நிகழ்த்திய திமுக பொருளாளர் துரைமுருகன், “தோழமைக் கட்சித் தலைவர்களை அன்புகாட்டி அரவணைப்பதிலும் சரி, இன்றைக்கு அன்னை சோனியாவிடத்திலே பிள்ளையாக மாறியிருப்பதிலும் சரி… தன்னிகரில்லாத தலைவராக ஸ்டாலின் விளங்குகிறார். தேசிய அரசியலில் இன்னும் 50 ஆண்டுக் காலத்துக்கு ஸ்டாலின் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கப் போகிறார். நேரு குடும்பமும், கோபாலபுரம் குடும்பமும் மீண்டும் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தேசிய தலைவர்கள் சென்னை வந்து சென்றால் அவர்களுக்குப் புதிய பதவிகள் தேடிவரும். அடுத்த பிரதமராக வர தகுதி படைத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி” என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி பேசும் போது, ““கலைஞர் சாதாரணமான அரசியல்வாதி அல்லர். அவர் தமிழ் மக்களின் குரலாகவும் ஒளியாகவும் இருந்தார். கலைஞர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர். மக்களுக்காகவே வாழ்ந்தவர், மக்களின் வலியை தன் வலியாகவும், அவர்களின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாகவும் கருதியவர். இரண்டாவது முறையாக கலைஞரைச் சந்தித்த தருணத்தை நினைவுகூர விரும்புகிறேன். கலைஞரின் இல்லத்துக்கு அதற்கு முன்பு நான் சென்றதில்லை. கலைஞரின் வீட்டுக்குச் செல்லும் முன்னதாக, அவரின் வீடு பெரிதாக இருக்கும், வீடு முழுவதும் பெரிய பெரிய பொருட்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். வீட்டுக்குள் சென்றபோது அவருடைய எளிமை, தூய்மை, நேர்மையைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். .

ஓர் இளம் தலைவராக அவரைச் சந்தித்த போது எனக்கு உந்துதலாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்தது. தலைமைக்கான வழியைக் காட்டியதையும் பார்க்கிறேன். அவர் மக்களின் குரலைப் பாதுகாப்பவர். அரசியல் சட்டங்களைப் பாதுகாப்பவர். இப்போது உள்ள அரசோ, தமிழர்களின் கலாச்சாரங்களை அழித்து வருவதைப் பார்க்கிறேன். தாங்கள் நினைப்பதை நிறைவேற்றக்கூடிய மனநிலையில் இருக்கும் அரசாங்கமாக தற்போதுள்ள அரசு உள்ளது. கோடான கோடி மக்களின் மனநிலையை மதிக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறது. இந்நாட்டில் உள்ள மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டை மதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது. கலைஞரை நினைவில் கொண்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி பாஜகவை அடக்குவோம் என்ற மனநிலை எல்லோரிடமும் உள்ளது.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழிப்பதை ஏற்கப் போவது கிடையாது. ரிசர்வ் வங்கி, உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிப்பதை ஏற்கப்போவது இல்லை. நாம் ஒன்றுபடப் போகிறோம், நாட்டுக்காக பாஜக ஆட்சியிலிருந்து நீக்கும் பணியை செய்வோம். இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம், கவுரமாக நினைக்கிறேன். ஒவ்வொரு தமிழர்களின் பெருமை யைக் கண்டு பெருமையடைகிறேன். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டைப் பலப்படுத்த வேண்டும்.” என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, “இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்துக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். வேறுபாடுகள் இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சர்யங் களில்லாத சாதிய மோதல்கள் இல்லாத, ரத்தக்களறி இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். நரேந்திரமோடியால் மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு சீரழிந்துக்கொண்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம். அவரால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், அவரால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், அவரால் நம்முடைய அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம்.

ஒரு நாட்டினுடைய சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால், பொருளாதாரம் சீரழிந்தால் அதனை சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. மோடியின் 5 ஆண்டு ஆட்சியால் இந்த நாடு 15 ஆண்டு கள் பின்னோக்கி சென்றுள்ளது. இன்னொரு 5 ஆண்டுகள் அவரை ஆளவிட்டால் கண்டிப்பாக சொல்கிறேன் இன்னொரு 50 ஆண்டுகள் இந்தியா பின்னோக்கி போய்விடும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னராட்சி நடத்தக்கூடிய மமதை கொண்டவராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்லாமல் தன்னை ஜனாதிபதியாக, ரிசர்வ வங்கியாக, உச்சநீதிமன்றமாக, தன்னையே சிபிஐயாக, தன்னை வருமானவரித்துறையாக நினைத்து செயல்படுபவர் தான் பிரதமர் நரேந்திரமோடி.

அதனால்தான் அனைத்துக்கட்சிகளும் இன்று ஒன்று சேர்ந்து நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம். இது ஏதோ நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற சேர்ந்திருக்கிறோம். திமுக ஆதரவோடு மத்தியில் கூட்டாட்சி அமையும்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம் என்பதை மார்த்தட்டி சொல்ல முடியும்.

அவற்றில் சிலவற்றை நான் அடையாளம் காட்டுகிறேன், அடக்கப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்புக்காக அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து மகுடம் சூட்டப்பட்டது. 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. 57 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4674 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது.

1250 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என கொண்டுவரப்பட்டது. நான் கேட்கிறேன் இப்படி ஏதாவது ஒரு சாதனையை இந்த பாஜக ஆட்சி செய்துள்ளது என்று சொல்ல முடியுமா?

பிரதமராக இருக்கும் மோடி அரசு இப்படி செய்துள்ளது என்று வரிசைப்படுத்தி சொல்லமுடியுமா? தமிழகத்துக்கு என்ன திட்டத்தையெல்லாம் எதிர்க்குமோ அந்த திட்டத்தைஎல்லாம் கொண்டுவந்து நிறைவேற்றும் சேடிஸ்ட் பிரதமரமாக செயல்படுபவர் மோடி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு காரணம் உள்ளது. அவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அன்மையில் கஜா புயல் 64 பேர் உயிரிழந்தார்களே, 14000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. விவ்சாயம் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 20 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்திலோ, மஹாராஷ்ட்ராவிலோ ஏற்பட்டிருந்தா பிரதமர் மோடி நேரில் போயிருப்பாரா? இல்லையா?

தமிழ்நாடு என்பதால் வரவில்லை. ஆள்தான் வரவில்லை, அவருக்கு கடுமையான பணிகள், அதுவும் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம்வேறு, நேரமில்லை. நான் கேட்கிறேன் ஒரு ஆறுதல் தெரிவித்தீர்களா? கவலைக்கொண்டுள்ளேன் என ஒரு செய்தி, இரங்கல் தெரிவித்து ஒரு ட்விட்டராவது போட்டீர்களா? அந்த அளவுக்கு தமிழ்நாடு என்ன பாவப்பட்ட ஒரு மாநிலமா?

2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓர்லெண்டா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது, இறந்தவர் குடும்பத்துக்காக வருத்தப்பட்டு ட்வீட் போடுகிறார் மோடி. 2017-ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீ ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்கிறார். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற நாகப்பட்டினத்தில், புதுக்கோட்டையில், தஞ்சையில் உயிரிழந்தவர் களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். அதைத்தான் சாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

தமிழர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? அதனால்தான் மோடியை வீழ்த்தவேண்டும் என்று சொல்கிறோம். அதற்காகத்தான் 21 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. அதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.