November 28, 2021

2400 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் நடப்பது என்ன? – மு.க. ஸ்டாலின் சந்தேகம்!

2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மதிய உணவுத் திட்டத்திற்கு முட்டை, சத்துமாவு, பயறு வகைகளை சப்ளை செய்த கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் வருமானவரித் துறை நடத்திய சோதனையின் போது, தமிழக அரசியல்வாதிகள், தமிழ்நாடு அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு ரூ. 2,400 கோடி லஞ்சம் தரப்பட்டதை உறுதி செய்யும் ஆவணங்கள் சிக்கின. அவற்றின் அடிப்படையில் நோட்டீஸ்களையும் விசாரணை அழைப்புகளையும் வருமான வரி அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்,

குட்கா ஊழலில் எப்படி அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க லஞ்சம் தரப்பட்டதோ அதே போல மதிய உணவுத்திட்ட ஊழலிலும் அரசியல் பிரமுகர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கண்ணையும் வாயையும் மூடிக்கொண்டு இருக்க ரூ. 2400 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்துவருகிறது. இதுபோல், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவைகளையும் ஒப்பந்த அடிப்படையில் விநியோகித்தது. இவை தவிர, பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை விநியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தனர்.

இதுபோல், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவன உரிமையாளர் வீடு, நிறுவன ஆடிட்டர்கள் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ. 17 கோடி வரை பணம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் அதிக எண்ணிக்கை யிலான சொத்து ஆவணங்கள், சந்தேகத்துக்குரிய பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள், ஆவணங்கள், பென்டிரைவ்கள், ஆகியவற்றை வருமான வரித்துறை கைப்பற்றிச் சென்றதாகக் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வருமானவரித்துறை கைப்பற்றிச் சென்ற பென் டிரைவ், ஆவணங்கள் மூலம் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், முக்கிய பதவியில் உள்ள அரசியல்வாதிகள், மூத்த உயரதிகாரிகளுக்கு கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 2,400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இதையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”மக்கள் விரோத அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.

ஆனால், எதிலும் இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏன் குட்கா வழக்கில் வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் “குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம்பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டி.ஜி.பி. மீதோ இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்பதுதான் இதுவரை உள்ள மிகுந்த அவலமான நிலைமை.

ஆகவே, இந்த வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன? ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியா? என்ற அய்யப்பாடு அனைவருக்கும் எழாமல் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.