October 20, 2021

அரம்பிச்சிட்டாய்ங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க ! – மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த அழகிரி!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் என்ன நடக்க வேண்டுமோ அக் காட்சிகள் அரங்கேறி விட்டது என்றே சொல்லலாம். இன்று கலைஞரின் மூத்த வாரிசான மு.க. அழகிரி ஒரு பிரைவேட் சேனலுக்கு அளித்த பேட்டியில், திமுகவுக்கு தாம் திரும்புவதை மு.க. ஸ்டாலின் விரும்ப வில்லை என்றும், திமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுகின்றன எனவும் கூறினார். பெரும்பாலான திமுக தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்பில் உள்ள னர் என்று குற்றம்சாட்டிய அழகிரி, தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள், திமுகவை அழித்து விடுவார் கள் எனவும் விமர்சித்தார். தாம் கட்சிக்குள் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என பலர் அச்சம் அடைகின்றனர் என்று தெரிவித்த அழகிரி, திமுகவில் பதவிகள் விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளது ஹாட் டாபிக்காகி விட்டது.

தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கி னார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் உள்ள குளறுபடிகளைக் கூறி ஸ்டாலினை விமர்சித்த அவர் 5 தொகுதிகள் கூட திமுக வெல்லாது என்று பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் கருத்து கூறியிருந்தார். திமுகவிலிருந்து வேறு கட்சிக்குப் போவதாக கருத்து உலாவியபோது, ‘நான் என்றும் திமுககாரன் தான்’ என்று அடித்துக் கூறினார் அழகிரி. அப்போது அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். ஆனாலும் திமுகவினர் அழகிரியைக் கண்டுகொள்வதில்லை.

அதே சமயம் கடந்த வாரம் கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி, ஸ்டாலின் கனிமொழி, தமிழரசு, செல்வி உள்ளிட்டோர் ஒற்றுமையாக சடங்குகளைச் செய்தனர். மறுநாள் மாலை அஞ்சலி செலுத்தும்போது கருணாநிதின் மகன், மகள்கள் மட்டும் ஒன்றாக ஒற்றுமையாக ஒன்றாக நின்று மாலையை நினைவிடத்தைல் வைத்து மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது மறைவுக்கு பிறகு இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் அழகிரி, ஸ்டாலின் ஒன்றாக பக்கத்தில் நின்றிருந்தனர். ஆனாலும் ஒருநாள் கூட இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. இதனிடையே கட்சிக்குள் அழகிரிக்கு பொறுப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. அத்துடன் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்படியான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் விரை வில் கூட உள்ள  நிலையில் இன்று காலை மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி, மகள் கயல் விழி உள்ளிட்டோருடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் அழகிரி அளித்த பேட்டி காரணமாக திமுகவுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அழகிரி  எனது ஆதங்கத்தை அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன். அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. கலைஞரின் உண்மையான விசுவாசமுள்ள உடன் பிறப்புகள் அனை வரும் என் பக்கம் உள்ளனர். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காலம் பின்னால் பதில் சொல்லும் என்று கூறி இப்போது முடித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் விரிவாகப் பேசியுள்ளார்

அவரது பேட்டி இதோ:

உங்கள் ஆதங்கத்திற்கு என்ன காரணம்?

பல ஆதங்கங்கள் இருக்கு.  அதையெல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்.

நீங்கள் மறுபடியும் கட்சியில் இணைந்து செயல்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களா?

நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார் அல்லவா? திமுகவில் செய்தித்தொடர்பாளர்கள் யாரும் டிவி சேனலில் பேட்டி அளிக்கக்கூடாது என்று படித்தேன். அப்புறம் அதற்கு என்ன அர்த்தம், பிறகு எப்படி என்னைக் கட்சியில் இழுப்பார்கள்.

திமுக தலைவர் மறைந்துள்ள நிலையில் இதுபோன்ற நிலையை அவர்கள் எடுப்பது சரியா?

அவர்களைக் கேளுங்கள். ஏற்கெனவே கூறியுள்ளேன். 6 மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும் ரஜினியிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தோற்றால் கட்சி சின்னாபின்னமாகிவிடும்.

பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசத் தயாரா?

அதெல்லாம் அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும்.  அந்த நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன? ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டுப் பேசுவீர்களா?

கண்டிப்பாக என் ஆதரவாளர்களிடம் எப்போதும் நான் பேசுவேன். தற்போது ஒன்றும் ஆக்டிவா இருக்கமாட்டோம். நேரம் வரும்போது காலம் பதில் சொல்லும் என்று சொன்னேன் அல்லவா? காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக. தலைவரே தண்டிப்பார் இவர்களை. தலைவரின் ஆத்மா இவர்களைச் சும்மா விடாது.

கட்சியில் உங்களை இணைக்கமாட்டேன் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கென்ன தெரியும். எனக்குப் புகழ் இருக்கிறது, கட்சித் தொண்டர்கள்விரும்புகிறார்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால் தலைவராகிவிடுவேன் என்ற எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் அல்லது மற்றவர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. யாரும் நான் கட்சியில் வருவது பற்றி பேசியதில்லை.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் திமுக சரியாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

சரியாகச் செயல்பட்டால் எப்படி டெபாசிட் போகும். என்ன கேள்வி இது.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கட்சிக்கு மேலும் சில பின்னடைவு என்பது உங்கள் ஆதங்கமா?

ஆமாம். வரிசையாகத் தோற்கிறார்கள், கட்சிக்காரன் காசு வாங்கிட்டான் என்று முதன்மைச் செயலாளரே பேசுகிறார். கட்சிக்காரன் காசு வாங்கியதால்தான் தோற்றுப் போய்விட்டேன் என்கிறார். கட்சிக்காரன் அவன் தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான், கட்சிக்காக எவ்வளவு உழைத்திருப்பான். அண்ணா காலத்திலிருந்து உழைத்து வருகிறான் இதைக்கேட்டு எப்படி எடுத்துக்கொள்வான் சொல்லுங்கள்?, இதெல்லாம்தான் என் ஆதங்கம்.

அதுவுமில்லாமல் காசு வாங்கிக்கொண்டு பதவி கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு செயலாளர் இருந்தால் ஒரு துணைச்செயலாளர் இருப்பார். இப்போது பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள்.