March 27, 2023

#Metoo சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!

#Metoo ஹேஷ் டேக் மூலம் வெளியான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

எம்.ஜே. அக்பர் அரசியலுக்கு வரும் முன்பாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கீழ் பணிபுரிந்தபோது எம்.ஜே.அக்பர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர். அதேபோல் அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் பாலியல் புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் மற்றும் பெண் தொழிலதிபரான சுவாதி கவுதம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியிறுத்தி வந்தது. ஆனால், தன்மீதான குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று மறுத்த அமைச்சர் அக்பர், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கு வரும் 18ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் அக்பர் திடீர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`என்மீது எழுப்பப்பட்ட பொய்ப் புகாருக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்வதே சரியானது என்று தோன்றுகிறது. எனவே, நான் வகித்துவந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். நாட்டுக்குச் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்