August 4, 2021

டிஜிட்டல் மீடியாவில் அந்நிய முதலீடு : மத்திய அரசு நிபந்தனை வெளியீடு!

உலகமயமான சந்தையில் முக்கிய சந்தையாகி வரும் டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி அனுமதி வழங்கியது. அதற்கான கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின்பற்றுவதற்கான பொது அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி டிஜிட்டல் நியூஸ் மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களில் அந்நிய முதலீடு 26 சத வீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. கூடுதலாக அன்னிய முதலீட்டை பெற்ற நிறுவனங்கள் 15.9.2021 ஆம் தேதிக்குள் 26 சதவீதத்துக்கு குறைத்து விட வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் என்று நிபந்தனை வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் திங்களன்று டிஜிட்டல் நியூஸ் மற்றும் டிஜிட்டல் மீடியா தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன் விவரம் இதோ:

26 சதவீதத்துக்கும் குறைவான அந்நிய முதலீட்டு பெற்றுள்ள நிறுவனங்கள் இந்த தகவலை மத்திய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு ஒரு மாத காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் அந்த நிறுவனத்தின் பங்கு முதலீடு இயக்குனர்கள் பெயர்கள் நிறுவனத்தை தோற்றுவித்தவர் விலை விவரம் ஆவணங்கள் அந்நிய செலாவணி நிர்வாகம் ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். மேலும் பான் நம்பர். சமீபத்திய லாப நஷ்ட கணக்கு. பேலன்ஸ் ஷீட். தணிக்கையாளர் அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.

26 சதவீதத்திற்கு மேல் அன்னிய முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் அதனை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் 26 சதவீதம் குறைக்க வேண்டும்.அந்தத் தகவலை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்து அதன் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

புதிதாக அன்னிய முதலீடு பெற விரும்பும் நிறுவனங்கள் இது குறித்து முன்கூட்டியே மத்திய அரசுக்கு தெரிவித்து ஒப்புதலைப் பெறவேண்டும்.

நிறுவனங்களில் இயக்குனர்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அந்த நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

இயக்குனர் குழுவில் இருப்பவர்கள் மத்திய அரசின் பாதுகாப்பு அனுமதி தரவேண்டும்.

வெளிநாட்டினரை 60 நாட்களுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்த விரும்புவோர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு இந்தச் செய்தியை குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னதாக தெரிவித்து ஒப்புதலைப் பெறவேண்டும்.

ஒப்புதல் பெற்ற பிறகே வெளிநாட்டவரை பணிக்கு அமர்த்த வேண்டும்.

இவ்வாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் திங்கள் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.