April 13, 2021

ஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க? தெரியாது – மத்திய அரசு பதில்!

இன்னும் குறையாத கொரோனாத் தொற்று தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு(?) அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்பட்டது . அதை பதிவிறக்கம் செய்தால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நபரின் விவரத்தை உடனடியாக காட்டும். மேலும், கொரோனா இருக்கிறதா என்பதையும் அறிகுறிகளை பதிவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த செயலி குறித்து பிரதமர் மோடியே தகவல் கொடுத்த நிலையில் இதுவரை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஆரோக்ய சேது டாப் 10ல் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது, எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..

இந்தியாவில் கொரோனா பரவலை கண்காணிக்க ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச் செயலியை பயன்படுத்தி, மற்றொரு ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டாளரின் உடல்நிலையை அறிவது மட்டுமின்றி, கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியும். இதன்மூலம், கொரோனா பாதிக்கப்பட்டோரிடம் இருந்து சமூக விலகலை கடைப்பிடிக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறியவும் உதவிப்புரிந்தது .அது மட்டுமின்றி, கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவுகிறது.

ஆனால் இச்செயலியை உபயோக்கிக்க செல்போனின் Bluetooth மற்றும் GPS லொகேஷனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதால் பயனாளர்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும் என புகார் எழுந்துள்ளது, இந்த செயலியை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள் பொறுப்பு பதவி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேங்களை எழுப்புவதாக உள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆரோக்கிய சேது செயலியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆக பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி மூலம் தனிநபர் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், செயலி குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு தற்போது மத்திய மின்னணு அமைச்சகம் அளித்த பதிலில், ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது, எப்படி உருவாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம். மேலும் ஆரோக்யா சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது