March 31, 2023

இளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்!- அமைச்சர் ஜெயகுமார்

பிள்ளை பெற்ற இளம்பெண்ணிடம் நான் பேசியதாக ஆடியோ வெளியான பின்னணியில் சசிகலா – தினகரன் கும்பல் சதி இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்து வழக்கு தொடர்வேன் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

உதவிக் கேட்டு வந்த இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டார். அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் மீது நேற்று காலையிலிருந்தே சமூக வலைத்தளங் களிலும் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன. இது குறித்து அந்த பெண்ணிடம் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாக ஒரு உரையாடல் ஆடியோவும் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்படைந்தன.

இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் பரவல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “என்னை நேரடியாக சந்திக்க திராணி இல்லாதவர்கள், ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர். அந்த போலி ஆடியோவை தயார் செய்து வெளியிட்டவர்கள் பின்னணியில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்.

இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இது போன்ற சில முயற்சிகள் நடந்தன. சிறுநரிகள் கூட்டத்திற்கு அஞ்சுகிறவன் நான் அல்ல. டி.ஜெயகுமார் என்று உலகத்தில் நான் ஒருவன் தான் இருக்கிறேனா போலி ஆடியோ பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக புகார் அளிப்பேன். வழக்கு தொடர்வேன்” இவ்வாறு அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு, அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அதில், “உதவி கேட்டு வந்த பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு வளர, அதைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண் மறுக்க, அவரை மிரட்டி இருக்கிறார் அமைச்சர். அவரது செல்வாக்கால் புகார் கொடுத்தும் அதைக் காவல் துறை பதிவு செய்ய மறுக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தப் புகாரை பதிவு செய்து, நடவடிக்கைக்காக அனுப்பியிருக்கிறது.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாருடன் பெண் ஒருவர் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதனுடன் குழந்தை ஒன்றின் பிறப்பு சான்றிதழும் வெளியாகியுள்ளது. அதில், தந்தை பெயர் டி. ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் ஆடியோவில் பெண்மணி ஒருவர் ஆணிடம் , “நான் அம்மா பேசுகிறேன். என் பொண்ணு வாந்தி எடுத்திட்டே இருக்கு ப்ரெக்னென்ட்டா இருக்கு. என்ன பண்றதுனே தெரியல” என்று கூறுகிறார்.

அதற்கு தனது வீட்டுக்கு நேரில் வரும்படி ஜெயக்குமார் கூறுவதாக அந்த ஆடியோ முடிகிறது.

இரண்டாவது ஆடியோ

ஆண்: சொல்லுங்க

பெண்: என் உறவுக்காரங்க எல்லாம் என்னை சேர்ந்து அடிச்சாங்க. ஏன் அவராண்ட கூட்டிட்டு போனனு கேட்டாங்க.. நான் ரெக்கமண்டுக்கு கூட்டிட்டு போனேன்னு சொன்னதுக்கு ரெக்கமண்டுக்கு போன பொண்ணுக்கு புள்ள கொடுத்து அனுப்புச்சிருக்காறே நல்லா இருக்கானு சொல்லி அடிச்சாங்க.

ஆண்: யார் எல்லாம் அடிச்சாங்க?

பெண்: என் மாமா, தங்கச்சி, அண்ணன் எல்லாமே

ஆண்: அவங்களுக்கு எப்படி தெரியும்?

பெண்: என் தங்கச்சி வீட்லதான் பொண்ண விட்டிருந்தேன்.

ஆண்: சரி குழந்தைய எடுத்தாச்சா?

பெண்: இன்னும் இல்லங்க

ஆண்: சரி டாக்டர்கிட்ட சொல்லி எடுக்க சொல்லிடலாம்.

பெண்: என் சொந்தக்காரங்க அவருகிட்ட எதாவது கேட்டு வாங்குனு சொல்றாங்க. நாங்க வேணா அவரு வீட்டுக்கிட்ட வறோம்னு சொல்றாங்க.

தொடர்ந்து மருத்துவமனை மற்றும் அங்கிருந்த தங்கிருந்தது குறித்து விசாரிக்கிறார்.

ஆண்: சரிம்மா, மெயின் ரோட்டுக்கு வந்து எனக்கு போன் பண்ணுங்க… நேர்ல மீட் பண்ணலாம்.

பெண்: என் அண்ணன் எல்லாரையும் கூட்டிட்டு வரவா?

ஆண்: அதுவேணாம்மா, எனக்கு உன்னை தெரியும், அந்தம்மாவ தெரியும். நாம நேர்ல பேசிக்கலாம்.

பெண்: ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துவரட்டுமா?

ஆண்: எடுத்துட்டு வாம்மா.. போன்ல பேச வேண்டாம். டீடெல்லா பேசிக்கலாம்.. உன்ன எவ்ளோ காலமா எனக்கு தெரியும்.. வா. நேர்ல பேசிக்கலாம் வாம்மா.

என்று கூறுவதாக ஆடியோ முடிகிறது.

மேற்குறிப்பிட்ட ஆடியோக்களில் உள்ள ஆண் குரல் அமைச்சர் ஜெயக்குமார்தான் என்று தினகரன் தரப்பினரும் திமுகவினரும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.