டிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது!
நம் இந்தியா தொடங்கி அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட நிலையிலும் பிரபலமாக இருக்கும் டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்குவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்திடம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் மிகவும் பிரபலமான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதால் டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் மாற்று வழிகளை யோசிக்க துவங்கியது.இந்நிலையில் டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதால் பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்த தாக தகவல் வெளியானது.இந்த சூழலில் அதிபர் டொனால்டு டிரம்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் மைக்ரோசாப்ட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதி செய்தது.
டிக் டாக் செயலியை வாங்குவது தொடர்பாக அதன் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக அமெரிக்க அரசு மற்றும் அதிபருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் டிக்டாக் செயலியை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை செப்டம்பர் 15ம் தேதிற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் மைக்ரோசாப்ட் தன் அறிக்கையில் கூறியுள்ளது.