எம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்!

எம்ஜிஆர் என்கிற “சோட்டா பீம்” உருவாக்கிய அதிமுகவின் பொன்விழா சஸ்பென்ஸ்!

பொதுவாக திராவிட இயக்க அரசியல் வரலாறு என்று பக்கம் பக்கமாக எழுதியவர்கள், எழுதுபவர்கள் இப்படித்தான் மனதுக்குள் எம்ஜிஆரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்..எம்ஜிஆரிடம் வீழ்ச்சி அடைந்தவர்கள் அனைவருமே அவரை அண்டர் எஸ்டிமேட் செய்தவர்கள்தான். அவர் எது செய்தாலும் நடிகர்.. அவர் ஏதாவது அரசியல் நகர்வை நடத்தினால் மேலிடத்து கையாள், கோழை..!

20 ஆண்டுகளில் 4 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பெரும் பங்காற்றிய ஒரு பழுத்த அரசியல்வாதியை, வெறுமனே நடிகர் நடிகர் என்று இளக்காரமாக நினைத்து நினைத்தே அவரிடம் அரசியலில் அடி வாங்கினார்கள் எதிரிகள். திமுகவில் சேரும்முன்பே அந்த இயக்கத்தின் கொள்கைகளை தன் படங்களில் ஏற்றியவர்..சேர்ந்த பிறகோ இன்னும் தீவிரம்.. ஜாடை மாடையாக அல்ல.. பட்டவர்த்தனமாகவே…!

அரசியல் வேறு, தொழில்வேறு என்று சால்ஜாப்பு காட்டும் பேரப்பிள்ளைகள் வகையறா அல்ல அவர்.. இரண்டையுமே ஒன்றாக பாவித்த தைரியசாலி…சக்ரவர்த்தி திருமகள்(1957) படத்தில் கதாநாயகனின் பெயரே, உதய சூரியன். எம்ஜிஆர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நாடோடி மன்னன் எடுத்தபோது எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பேனரில் ஆணும் பெண்ணும் திமுக கொடியை தாங்குவது போலத்தான் அமைத்தார்..

நாடோடி மன்னன் படத்தில் வீராங்கன் பாத்திரத்தில் வரும் நாடோடி பாத்திரம் முழுக்க முழுக்க அறிஞர் அண்ணாவை மையப்படுத்தியது.. படம் முழுக்க அண்ணாவின் பேச்சையும் கொள்கைகளையும் அப்படியே வைத்தார் எம்ஜிஆர்..! 1950 -களில் அண்ணா, சம்பத், நாவலர், கலைஞர் போன்றோரின் பேச்சுகள் நாள் தவறாமல் பொதுக்கூட்ட மேடைகளில் ஒலித்ததோ என்னமோ?

ஆனால் திமுக பிம்பத்தை தனது படங்களில் புகுத்திய எம்ஜிஆரின் திரைப்படங்கள் ஓடாத நாட்களே தமிழகத்தில் கிடையாது..! கொட்டகைக்கு வந்த மக்களை ரசிகர்களாக மாற்றி அப்படியே திமுக அபிமானிகளாய் மடைமாற்றம் செய்தவர் அவர்..

அப்போதைய தலைவர்களில் அண்ணாவைத் தவிர மக்கள் மனதில் திமுகவின் அடையாளமாய் பொதுவெளியில் ஜனரஞ்சகமாய் அதிகமாக பதிந்தது எம்ஜிஆர்தான்.. அதற்கு அவருடைய சினிமா முகம் மாபெரும் பலமாக அமைந்தது. தான் இருந்த கட்சியை பிரபலப்படுத்தவேண்டிய வேலையை , செல்வாக்கு பெறவைக்கவேண்டிய கடமையை தன் பங்கிற்கு ஒரு திரையுலக பிரபலமாய் அவர் கச்சிதமாவே செய்தார்..

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தவர்தானே என்று ஒரு விமர்சனம்..!நடிப்பதால் கிடைக்கும் புகழை வைத்துதான் அவர் கட்சிக்கு தன் பங்கை ஆற்றினார். அதனால்தான் அவர் அவரது தொழிலில் மும்முரமாக இருந்தார்..

ஏன் அண்ணாவுக்கு தெரியாதா? திமுக போராட்டங்க ளில் எம்ஜிஆரும் கலந்துகொள்ளவேண்டும் என்று சொல்லவில்லையே ஏன்? எம்ஜிஆர் என்பவர் பணத்தையும் புகழையும் ஒரே நேரத்தில் கட்சிக்கு வாரிக்கொடுக்கும் தகுதி கொண்டவர்.. ஆகையால் அவரைத்தான் இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்ற அண்ணாவுக்கு தெரியாதா?

கலைஞர் வசனத்தில் பராசக்தி (1952) முன்பே நாத்திகத்தையும் ராஜகுரு வகையறாக்களையும் அதிகம் துவம்சம் செய்த மந்திரிகுமாரி(1950) படத்தில் எம்ஜிஆர்தானே நாயகன்.. தைரியமாகத்தானே நடித்தார்..

ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் தமிழகம் முழுவதும் சுற்றிவந்தும், திரைப்படங்கள் மூலமும் மக்கள் மனதில் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர் எம்ஜிஆர்..! அப்பேர்பட்ட திமுக தனக்கு எதிராக திரும்பி விட்டதும் அவர் அசந்தா போனார்? தான் சாகும் வரை அரசியல் எதிரி திமுகவை அரியணையில் ஏறவிடாமல் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய சக்தி அவரிடம் இருந்தது..

எம்ஜிஆர் என்ன புரட்சி செய்தார் அவருக்கு புரட்சி தலைவர் பட்டம் என்று ஏளனமாய் சொல்பவர்கள் ஏராளம்..! ஆளுங்கட்சியாக இருக்கும்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அதனை எதிர்த்து ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல,ஆளுங்கட்சியையே மூன்றாவது இடத்திற்குத் துரத்தி அடித்தது எப்படிப்பட்ட மிரட்டல் அரசியல் என்ட்ரி.

இன்றைய தலைமுறைக்கு புரியும்படி சொன்னால்,பாட்ஷா படத்தில் ஆனந்தராஜை முதன்முறையாக அடிப்பாரே ஆட்டோ ஓட்டுநரான ரஜினி ரஜினி, அதுபோன்ற அடிக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல் லட்சம் அடி சமானம். பாட்ஷாவின் இந்த சூப்பர் சீனை தனது 100வது படமான ஒளி விளக்கு(1968) படத்தில் ஆர்எஸ் மனோகர் உடனான சண்டைக்காட்சியில் காட்டி விட்டார் என்பது பல பேருக்கு தெரியாது..

போகட்டும் மறுபடியும் பாட்ஷா படத்திற்கு வருவோம். ஆனந்தராஜை அடித்துவிட்டு அதன்பிறகு அவரது கும்பலை வெறித்தனமாய் புரட்டி புரட்டி எடுப்பார் எடுப்பார் ரஜினி. அந்த சீனை விட பல மடங்கு வலிமை வாய்ந்தது அண்ணா திமுக இயக்கத்தை ஆரம்பித்து அடுத்தடுத்து தேர்தலை எம்ஜிஆர் சந்தித்த விதம்..

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி ..!

கோவை சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி..!

புதுவையில் ஆட்சியையே கைப்பற்றியது.!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, சட்டமன்றத்துக்கு இனி முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்ற சபதத்தை ஐந்தே ஆண்டுகளில் நிறைவேற்றி 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது..

ஒரு இயக்கத்தை ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக முக்குபவர்கள் போலல்ல அவர்.

இப்படிப்பட்ட அரசியல் தலைவனை புரட்சித் தலைவன் என அழைக்காமல் புடலங்காய் தலைவன் என்றா அழைக்க முடியும் என தாராளமாகவே கேட்கலாம்

ஆனால் ஒன்று மட்டும் அப்பட்டமான உண்மை.. எம்ஜிஆரின் அதிமுக, ஜெயலலிதா கையாண்ட அதிமுக, பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் இடம் போய் சேர்ந்த அதிமுக… இந்த மூன்றுமே மூன்று விதமானவை. ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார் என்று எம்ஜிஆர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.. எடப்பாடி முதலமைச்சர் ஆவார் என்று ஜெயலலிதா நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.. யாரும் யாரையும் அடையாளம் காட்டிவிட்டு போகவில்லை..

6 முதலமைச்சர்களை தந்த ஒரு இயக்கம் அரை நூற்றாண்டை காணும் தருவாயில் ஆடித்தான் போயிருக்கிறது ஒற்றை தலைமை இல்லாமல்.. எம்ஜிஆர் இருந்தவரை மாநில ஆட்சியில் இருப்பது நேர்கோடு.. அதன்பிறகு பலதடவை ஏற்ற இறக்கங்கள்..எதிர்காலம் எப்படியோ என ஆயிரம் சஸ்பென்ஸ்சோடு பொன்விழா ஆண்டில் நுழைகிறது அண்ணா திமுக..!

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!