October 18, 2021

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாவது இரு அணியும் இணைந்து கொண்டாடப்படாதா?

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். நிறைவு விழா டிசம்பர் மாத கடைசியில் சென்னையில் நடக்கிறது. பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசிய போது, இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாராம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரண்டாக உடைந்து போன அதிமுக- வின் நிறுவனர் எம்ஜி.ஆர்- நூற்றாண்டு விழா தற்போது வருகிறது. இதையொட்டி இரு அணியினரும் தனித்தனியான ஏற்பாடுகள் செய்து அதில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டின் நலனுக்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கவும், கடுமையான வறட்சியால் விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும்,அத்திக்கடவு-அவினாசி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி மனு அளித்தது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

விவசாயிகளின் துயர் துடைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும்,மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும், முதுகலை மருத்துவ பட்டப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கவும், சேலம் உருக்காலைப் பிரச்சினையைத் தீர்க்கவும், மீனவர் சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தது குறித்து, எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்தும் விளக்கமாக விவாதிக்கப்பட்டது.

அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அக்டோபர் மாதம் மிக பிரமாண்டமாகவும், எழுச்சியாகவும் கொண்டாடப்பட இருப்பதை பிரதமரிடம் எடுத்துக்கூறி, அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பிரதமர் விழாவில் உறுதியாக கலந்து கொள்வதாகவும், விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதையும், கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளிடமும், நாடாளுமன்ற- சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் எடுத்துச் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பிரதமரிடம் வழங்கிய கடிதத்தில், “
மிகவும் புகழ்பெற்ற, மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான தமிழக முதல்–அமைச்சர்களில் ஒருவரான மறைந்த முதல்–அமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் மாதிரி திட்டங்களாக நிறைவேற்றப்படும் வகையில், பல்வேறு புதுமையான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எம்.ஜி.ஆர். இன்றும் எல்லோராலும் நினைவுகூரும் வகையில் இருக்கிறார்.

அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நிறைவேற்றிய சத்துணவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் பாராட்டப்பட்டு, நாடு முழுவதும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் வேகமான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான். மத்திய அரசாங்கம் அவரது இணையற்ற பொதுசேவைக்காக இந்தியாவிலேயே உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி கவுரவித்தது.

தமிழக மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்களுக்கும் எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஒரு உந்துசக்தியாக திகழ்கிறார். அவருடைய பெருந்தன்மைக்காகவும், தாராள மனப்பான்மைக்காகவும், சீரிய தலைமைக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காக போராடும் உறுதிப்பாட்டுக் காகவும், எப்போதும் அவர்களால் நினைவில் வைத்து போற்றப்படுகிறார்.

மக்களின் பொதுநலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைகள் மூலம் பாடுபடவேண்டும் என்று லட்சோபலட்ச மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சரித்திரம் இருக்கிறது. தமிழக அரசு அவரது நூற்றாண்டு விழாவை மிக பொருத்தமான வகையில் பிரமாண்டமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 2017–ம் ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறது. இறுதி நாள் நிகழ்ச்சியாக ஒரு பிரமாண்டமான பொதுநிகழ்ச்சியை சென்னையில் டிசம்பர் 15–ந் தேதியில் இருந்து 31–ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விழாவில், 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் அந்த விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது மறைந்த பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நினைவுக்கு நிச்சயமாக புகழ்சேர்க் கும், அஞ்சலியாக விளங்கும். இந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் தாங்கள் கலந்துகொள்வதற்கு ஒப்புதல் அளிக்கும்படி, நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விழாவை சென்னையில் நடத்தும் வகையில் தாங்கள் டிசம்பர் 15–ந் தேதி முதல் 31–ந் தேதிக்குள் தங்களுக்கு வசதியான ஒருநாளை குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவையாவது இரு அணியினரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருவது இரு அணி தலைவர்கள் காதிலும் இதுவரை விழவில்லை என்பதுதான் சோகம்!