September 20, 2021

தடுப்பு சுவர் கட்ட காசு கேட்ட அமெரிக்கா விசிட்-டை கேன்சல் செய்த மெக்சிகோ அதிபர்!

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் மெக்சிகோவில் இருந்து 5.8 மில்லியன் பேர் அங்கீகரிக்கப்படாமல் அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதன்படி இப்போது அவர் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டார். அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என்பது டொனால்டு டிரம்பின் தேர்தல் வாக்குறுதியின் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இப்போது அதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ள டொனால்டு டிரம்ப் “எல்லையில்லாத தேசம் தேசமே கிடையாது,” என கூறியது மட்டுமல்லாமல், மெக்சிகோதான் அதற்கான செலவையும் ஈடுசெய்ய வேண்டும் என்று கூறினார்.

usa jan 26

ஆனால் அமெரிக்காவின் தடுப்புச்சுவர் நடவடிக்கைக்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், எல்லையில் சுவர் கட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை என்னை வருத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இது நம்மை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விடும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே அடுத்த வாரம் மெக்சிகோ அதிபர் நீட்டோ அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், மெக்சிகோ அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”தடுப்புச் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ பணம் தர விருப்பம் இல்லையெனில், மெக்சிகோ அதிபர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்வதே சிறப்பாக இருக்கும்” என காரசாரமான கருத்துக்களை பதிவு செய்ததையடுத்து மெக்சிகோ அதிபர் தன் யு எஸ் விசிட்டை கேன்சல் செய்து விட்டார்.