March 27, 2023

பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்!

சின்மயியை தந்தி டிவி பாண்டே பேட்டி எடுத்ததை கண்டேன்.

இதை விட மோசமாக ஒரு இண்டர்வியூ நடத்த முடியாது.

வழக்கமாக கெஸ்ட்களை பேச விடாமல் அவரே பேசுவது என்பதற்காக சொல்லவில்லை.

ஆனால் ஒரு ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்வது எத்தனை கடினமாக இருக்கிறது என்பதை அந்த பேட்டி உணர்த்தியது.

“இத்தனை ஆண்டுகளாக ஏன் சொல்லவில்லை?”

“பெரிய மனிதர் அவரின் இமேஜ் என்னாவது?”

“ஆண்களின் வாழ்க்கை அழிவது பாவமில்லையா?”

இந்த ஆங்கிளில் தான் கேள்விகள் அமைந்திருந்தன.

சின்மயி ஒரு கட்டத்தில் “பெண்களை பாதுகாப்பதை விட பிரெடட்டர்களை பாதுகாப்பது எப்படி என தான் கவலைபடுகிறீர்கள்” என அழும் நிலையில் சொன்னார்.

ஊடகங்கள் சின்மயியை எடுத்த பிரஸ் மீட்….இதை எல்லாம் தோற்கடிக்கும் விதத்தில் இருந்தது.

பாலியல் வன்முறைகளை அனுபவிக்காத பெண்களை இந்தியாவில் விரல் விட்டு எண்ணி விடலாம்.

வயதுக்கு வருமுன்னரே தொடங்கும் இந்த அத்துமீறல்கள் 50, 60 வரை தொடர்ந்து நடை பெறுகின்றன

இதை சந்திக்காத பெண் இல்லை. இதை உணர ஒவ்வொரு ஆணும் தம் வீட்டு பெண்களிடம், தாய், தங்கையிடம், மனைவி, மகளிடம், மருமகளிடம் பேசினால் போதும்

பஸ், ஆபிஸ், பள்ளி, கல்லூரி, நண்பர்கள், உறவினர்கள்..என பெண்களை பாலியல் சீண்டல் செய்யாத இடமில்லை, நாளில்லை.

அதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நாட்கள் போதாது. கேட்க ஆண்கள் தயாராக இல்லை, விரும்பவும் இல்லை.

“எதையும் சொல்ல வேண்டாம். அப்படியே மனதுக்குள் போட்டுவைத்துக்கொண்டு இருந்துவிடுங்கள்” என்பது தான் இதற்கான தீர்வா?

“வைரமுத்து எங்கள் இனத்தின் அடையாளம்” என சீமான் வேறு அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

காந்தி கூட தேசதந்தைதான். அவர் பெண்கள் விசயத்தில் செய்த விஷபரிட்சைகளை உலகறியும். கூகிள் செய்து தெரிந்துகொள்ளலாம். நேரு கதை தனி.

உலகின் பலநாடுகளின் தேசதந்தையர் பலரும் பெண்கள் விசயத்தில் வீக் தான். அவ்வளவு ஏன் சாமியார்கள், மகான்கள், பாதிரியார்கள் எல்லாரும் கணநேர சபலத்தில் வழுக்கி விழுந்தவர்கள் தான்.

அதனால் ஆண்களின் பயோடேட்டாவையும், வீரசாகசங்களையும் எடுத்துக்கொண்டு வந்து பெண்களின் வாயை அடைக்க முயல்வது தவறு.

“எப்போது வழக்கு போட போகிறீர்கள்?” என்பது பாண்டே வைக்கும் கேள்வி.

சட்டபடி இதில் வழக்குபோட எதுவுமே இல்லை. ச்விட்சர்லாந்தில் நடந்த சம்பவத்துக்கு சென்னை யில் எப்படி வழக்கு தொடரமுடியும்? அதிலும் என்னவென வழக்குபோடுவது? என்னை செக்சுக்கு அழைத்தார் என்றா? அதில் சட்டபடி தவறு எதுவுமில்லையே? 18 வயதுக்கு மெலுள்ள ஆண் 18 வயது தான்டிய பெண்ணை செக்சுக்கு அழைப்பது சட்டபடி குற்றம் அல்ல. சின்மயிக்கு வழக்கு தொடர ஆலோசனை சொல்பவர்கள் மிக தவறாக ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பணியிட எதிக்ஸ் பிரச்சனைதான். போலிஸும், சட்டமும் தீர்க்கும் விசயம் அல்ல. நடிகர் சங்கம், சினிமா சங்கங்கள், பிறதுறை சங்கங்கள் தம் எதிக்ஸ் கைடுலைன்களை மாற்றாதவரை இப்பிரச்சனை தீராது.

ஒரு துறையில் பணிபுரியும் ஆண் பணியிட சலுகைகளை காரணம் காட்டி பெண்களை படுக்கைக்கு அழைப்பது எதிக்ஸ் பிரசனைதான். துறைசார் நடவடிக்கைகள், பொதுவெளியில் பிரச்சனையை எழுப்பி நீதி கேட்பது..இவைதான் தீர்வுகள். வழக்கு தொடுப்பது அல்ல.

Sunlight is the best disinfectant.

கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் சின்மயியின் பேத்தி காலத்தில் தான் வழக்கு நடந்து முடியும்

மற்றபடி:

இது சின்மயி, பெண்கள் சங்கம் இவர்கள் நடத்தவேண்டிய போராட்டம் அல்ல.

நம் வீட்டு பெண்களுக்கும் இது நடப்பது, நடந்துகொண்டிருப்பது, நடக்கப் போவது

உங்கள் மனைவி, மகள், தாய், மருமகள்…அனைவருக்கும் பணியிடத்தில் நடக்ககூடியது, நடப்பது, நடக்கப் போவது.

அதனால் எல்லாரும் தட்டிகேட்கவேண்டிய விசயம் இது

புகார் சொல்லும் பெண்களை அழவைத்து, பேட்டி என்ற பெயரில் அசிங்கபடுத்தி வார்த்தைகளால் கொன்றால் எந்த பெண்ணும் இனிமேல் வாயை திறக்கமாட்டாள்.

அதுதான் இங்கே நடக்கிறது

ஆனால் அதற்கு எல்லாம் அஞ்சாமல் பெண்கள் தைரியமாக புகார் சொல்லவேண்டும். ஏன் என்றால் குனிய, குனிய குட்டல்கள் அதிகரித்துக் கொன்டுதான் வரும். துணிந்து எழுந்து நின்று அடித்தால் தான் இது எல்லாம் தீரும்.

நியாண்டர் செல்வன்