அப்துல் கலாம் நினைவிடத்திற்கு போதிய இடம் கிடைக்கலை! – மத்திய அரசு தகவல்!

அப்துல் கலாம் நினைவிடத்திற்கு போதிய இடம் கிடைக்கலை! –  மத்திய அரசு தகவல்!

அப்துல்கலாமிற்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக டெல்லி மேல்–சபையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசினார். ஆப்போது அவர், ‘‘அப்துல் கலாம் நமது தலைசிறந்த குருக்களில் ஒருவர். அதேபோல் தலைசிறந்த ஒரு ஆசிரியரும் ஆவார். ராமேசுவரத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த வாரத்துடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஆனாலும் அந்த இடம் வெறும் கூரையுடன் காட்சி அளிக்கிறது. அந்த பகுதி எங்கும் நாய்கள் அசுத்தம் செய்கின்றன. இது, நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடமன்றி வேறெதுவும் இல்லை’’ என்றார்.

 kalam jy 20

இதற்கு அ.தி.மு.க. எம்.பி.க் கள் அனைவரும் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய டெல்லி மேல்–சபை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், ‘அவர் பேசுவது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவருடைய கருத்தை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு’ என்றார்.

தொடர்ந்து பேசிய டெரக் ஓ பிரையன், “அப்துல்கலாம் நினைவிடம் அமைப்பது தாமதமாகி வருவது தொடர்பாக மத்திய அரசையோ, மாநில அரசையோ நான் குறை கூறவில்லை. நினைவிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் கூறுகிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்து ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், “மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனினும், இப்போதைக்கு 1.8 ஏக்கர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது. நமது முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் 27–ந்தேதி நாட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். தற்போது எங்களிடம் உள்ள நிலத்தை வைத்து நினைவகத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி திட்டமிட்டபடி வருகிற 27–ந்தேதி தொடங்கப்படும். நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே கூடுதல் இடத்துக்காக காத்திருக்காமல் அன்றே நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்படும்”என்றார்.

இந்த நிலையில் வருகிற 27–ந்தேதி மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் பேய்க்கரும்பு பகுதியில் அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் 7 அடி உயரத்தில் அவருடைய முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சிலை ஐதராபாத்தில் தயாராகி வருகிறது. சிலையை நிறுவதற்காக 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது.

அப்துல்கலாமிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அப்துல்கலாமின் வெண்கல சிலையை திறந்து வைப்பார் என்றும் அப்போது அவர் மணிமண்டபம், அறிவுசார் மையம், அருங்காட்சியகம் ஆகியவை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவார் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!