வீட்டு வேலைக்கு போனால் கொத்தடிமையா? ஆஸி.ல் கிளம்பிய புது சர்ச்சை!

வீட்டு வேலைக்கு போனால் கொத்தடிமையா? ஆஸி.ல் கிளம்பிய புது சர்ச்சை!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியினர் பலருக்கு வசிக்கும் நாடுகளின் சட்டத் திட்டங்களைப் பின்பற்றுவதில் கடும் பிரச்சினை. விளைவு சிறைவாசம். இப்படியொரு வழக்கில் இப்போது சிக்கியிருப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் கண்ணன் தம்பதியினர். தங்களது வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வதற்காக 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) வேலைக்கு அமர்த்தினர். கடந்த மூன்றாண்டுகளாக இப்பெண்மணி அவர்களால் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றம் சென்று தம்பதிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார். நடந்தது என்ன?’

கடந்த ஜூலை 2015 ஆம் ஆண்டில் ஒரு வீட்டின் கழிவறையில் பாதிக்கப்பட்டப் பெண்மணி சிறுநீர் தேக்கத்தில் மயங்கிய நிலையில் மருத்துவக் குழு ஒன்றால் மீட்கப்பட்டார். அவரது உடல் எடை 40 கிலோ அளவில் மட்டுமே இருந்தது. பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.அவருக்கு சிறுநீர்த் தொற்றும், நீரிழிவு நோய் இருப்பதும் தெரிய வந்தது. சில தினங்களுக்கு முன்னர் தம்பதியினர் குற்றவாளிகள் என ஜூரிகளின் முடிவையொற்றி நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் தங்களது மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி ஜாமீன் பெற்றனர் தம்பதியினர்.

பாதிக்கப்பட்ட நபர் 2004 ஆம் ஆண்டு முதல் தம்பதிகளுக்கு பழக்கம் என்றும் 2007 ஆம் ஆண்டில் டூரிஸ்ட் விசாவில் வந்தவர் தம்பதியினரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டார். இந்நிலையில் விசாவும் முடிவடைந்து விட்டது. ஆனால் தம்பதியினர் அவரை அடிமைப் போல நடத்தியதாகவும் குறிப்பாக கண்ணன் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அவர்கள் தன்னை பிறருடன் எக்காரணம் கொண்டு கலந்துப் பழக விடவில்லை என்றும், யாருடனும் பேசுவதை அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். தன்னை உள்நாட்டில் சுர்றுலாவுக்கு அழைத்துச் சென்றாலும் தன்னை அடுத்தவருடன் இணைந்து காணப்படுவதை அவர்கள் விரும்பியதே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆங்கிலம் தெரியாது; உள்ளூர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடனும் தொடர்பில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் இந்தியாவிலுள்ள தங்கள் உறவினரிடமும் பேசுவதை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் பாதிக்கப்பட்டவரின் வாதங்களை தம்பதியினரின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். நேரடி சாட்சியங்கள் எதுவும் இன்றி பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது தவறு என்று அவர்கள் வாதிடுகின்றனர். நீதிபதிகள் முன் சாட்சியம் அளித்த போது பாதிக்கப்பட்டவர் தம்பதியினரின் கொடுமைகளுக்கு உடன்படுவதைத் தவிர தனக்கு வேறு வழித் தெரியவில்லை என்றார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போதும், அங்கு சென்ற பிறகும் வேலை கொடுப்பவர், செய்பவர் இருவரும் கடை பிடிக்க வேண்டியவை ஏராளம். ஆனால் இவை மீறப்படும் போது நேரடி சாட்சியங்கள் எப்போதும் கிடைக்காது. குறிப்பாக நான்கு சுவற்றுக்குள் நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. தொழில்நுட்பம் முன்னேறிய இக்காலத்திலும் அடைத்து வைத்து கொத்தடிமை வேலை வாங்கி விடலாம் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! படித்தவர்களே சட்டங்களை மீறி நடந்து கொண்டால் பின்னர் அசிங்கப்பட வேண்டியதுதான். இந்தியா போல நீதியை ஏமாற்றி விடலாம்; விலைக்கு வாங்கி விடலாம் என்பது வெளிநாடுகளில் நடப்பதில்லை; ஏனெனில் பாதிக்கப்பட்டவர் சார்பாக இந்திய வெளியுறவுத்துறை தலையிட வாய்ப்புண்டு. எனவே நீதிபதிகளும், அந்தந்த நாட்டு அரசுகளும் இதில் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். இவ்வழக்கில் எப்படி விசா காலம் முடிந்தப் போன பெண்மணி ஒருவரை, அதுவும் சுற்றுலா விசாவில் வந்தவரை எட்டு வருடம் வீட்டு வேலையில் வைத்திருந்தனர் என்பது புரியவில்லை. வழக்கில் இந்த விசாரிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர் ஆங்கிலம் தெரியாது என்று சொல்லலாம். தம்பதியினர் நல்ல வேலையில் இருப்பவர்கள்; பொருள் ஈட்டுபவர்கள். எப்படி சட்டம் தெரியாது என்று சொல்ல முடியும்?

இது போன்ற கேள்விகளே பெரும்பாலும் அயல் நாட்டுப்பணி வழக்குகளில் உள்ளடங்கியுள்ளது. இதற்கொரு நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் இருந்தால் அதுபற்றி மக்களிடத்தில் அதை பெருமளவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசும் கொண்டுச் சேர்க்க வேண்டும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts

error: Content is protected !!