ஹைடெக்காகி போய் விட்ட இவ்வுலகில் ஒரு சங்கேத குறியீட்டுடன் பல கோடி ரூபாய்க்கு ஒரு வியாபரம் நடக்கிறது. அந்த சங்கேத வார்த்தை – ‘ரெட் மார்கெட்’.ஆம் சர்வதேச அளவில் இன்று உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி சில பல ஆங்கில புத்தங்களும், தமிழில் கூட ரோமியோ, என்னை அறிந்தால், ஈ, காக்கிச் சட்டை, மெர்சல் என்னும் தலைப்பில் வந்த சினிமாக்களும் வந்து அதிர்வலையை கிளப்பிச் சென்ற நிலையில் கொஞ்சம் ஆழமாக மேற்படி ரெட் மார்கெட் குறித்தான சமாச்சாரத்தைச் சொல்ல ட்ரை பண்ணி இருக்கும் படம்தான் ‘மெய்’.

அதாவது அமெரிக்காவில் டாக்டர் பட்டம் படித்தவர் தொடர வேண்டிய டியெய்னிங்கை முடிக்காம சென்னை வந்து விடுகிறார் நாயகன் நிக்கி சுந்தரம், இங்கே தான் டாக்டருக்கு படித்தவன் என்பதை சொல்லாமல் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். அதே ஷாப்-புக்கு அடிக்கடி வரும் மெடிக்கல் ரெப் ஐஸ்வர்யா ராஜேஷ். இருவரும் பேசி, பழகி நேரத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் சூழலில் ஹீரோ நிக்கியுடன் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் வாலிபர் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட, அங்கு மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதே சமயம் மர்மமான முறையில் பலர் காணாமல் போகிறார்கள். அவர்கள் மிஸ்ஸிங் குறித்து போலீஸ் அதிகாரி கிஷோர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவ மனையில் உயிரிழந்த வாலிபரின் மரணத்திற்கு நிக்கி சுந்தரம் தான் காரணம், என்று மருத்துவமனை கூறுகிறது. அதனால் நிக்கியை போலீஸ் தேடுகிறது. இதை அடுத்து இந்த மருத்துவமனையில் ஏதோ தப்பு நடக்கிறது என்று ஊகித்து மர்மங்கள் குறித்து கண்டறிய களம் இறங்கும் நிக்கி, காணாமல் போகிறவர்களுக்கும், தனியார் மருத்துவமனையின் மர்மங்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது என்ன தொடர்பு, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையோடு, விறுவிறுப்பான காட்சிகளோடும் சொல்வது தான் மெய் படத்தின் ரியல் ஸ்டோரி.

நாயகன் நிக்கி சுந்தரம் டி வி எச் குரூப்-பில் பிறந்து நிஜமாகவே அமெரிக்கா போய் படித்து திரும்பியவர். நடிக்க முயற்சிக்கிறார். தனக்கு இது முதல் படம் என்பதை பல சீன்களில் ரசிகர்களுக்கு உணர வைத்து விடுகிறார். கூத்துப் பட்டறை போன்ற இடங்களுக்கு போ முறையான நடிப்பு பயிற்சி பெற்று, தனக்கு எந்த கதாபாத்திரம் பொருந்துமோ அதை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் நல்ல நடிகராக வருவார். தனக்கான ரோல்களின் முக்கியத்துவம் என்பதை அறிந்து படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தனக்கு கொடுக்கப் பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். சில மணிநேரமே வரும் தங்கதுரையும், மதனும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளனர். மதன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நின்று விடுகிறார். ஆய்வாளராக நடித்திருக்கும் கிஷோர் அவருக்கேயுரிய மிடுக்கான நடிப்பில் கவனம் பெறுகிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது..

மொத்தத்தில் இந்த ரெட் மார்கெட் கதையை கையில் எடுத்த டீம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உண்மையிலேயே ‘மெய்’ முழுமையாக ஜெயித்திருக்கும்.. ஆனாலும் போரடிக்காமல் உள்ளது என்பதே மிக்ப் பெரிய பலம்

மார்க் 2.5 / 5