மீ டு விவகாரம் : மியூசிக் அகாடமியில் அதிரடி!

மீ டு விவகாரம் : மியூசிக் அகாடமியில் அதிரடி!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஹாட் டாபிக்காகி உள்ள மீ… டூ சர்ச்சையில் சிக்கிய 7 இசைக் கலைஞர்கள் சென்னை மியூசிக் அகடாமியின் மார்கழி இசை நிகழ்ச்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீ…டூ மூலம் பாலியல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு துறையினர் மீது தொடர்ந்து மீ…டூவில் புகார் வந்தது. இதையொட்டி, இசைக் கலைஞர்களான ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன், நாகை ஸ்ரீராம் ஆகியோர் மீதும் மீ…டூவில் பாலியல் புகார் வந்தது. இந்த 7 பேரும் சென்னை மியூசிக் அகடாமியில் டிசம்பர் மாதம் நடக்கும் மார்கழி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகி இருந்தார்கள். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 7 இசைக் கலைஞர்கள் மியூசிக் அகடாமியின் மார்கழி இசை நிகழ்ச்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மியூசிக் அகடாமியின் தலைவர் முரளி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியின் போது, “மார்கழி மாத இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் மியூசிக் அகடாமியில் நடக்கிறது. அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி இசை நிகழ்ச்சிக்கு தேர்வான இசைக் கலைஞர்களில், 7 பேர் மீ…டூ விவகாரத்தில் சிக்கியுள்ளார்கள். இதனால், 7 பேரும் மார்கழி மாத இசை நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

7 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்த பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற துறைகள் மீ…டூ குறித்து பேசவே தயங்கும்போது, நாங்கள் தைரியமாக நீக்கம் செய்து இருக்கிறோம். மேலும், இது பிற துறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும்”என்று அவர் கூறினார்.

error: Content is protected !!