டாக்டர் கபீல் கானுக்கு நெக்குருகும் நன்றி மடல்

டாக்டர் கபீல் கானுக்கு நெக்குருகும் நன்றி மடல்

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி சாமான்யனை பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர்.

உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. முழுக்க… முழுக்க ஆட்சி எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்.. இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

வெறுப்பு அரசியல்விதைகளை விதைக்கவே நேரமில்லாத மதவாத அதிகார வர்க்கத்துக்கு குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து என்னதான் கவலை. அதுவும் மாநில முதல்வரின் சொந்த தொகுதியிலேயே நடந்துள்ள இந்த உயிரிழப்பு அவர்களின் மக்களுக்கான அக்கறையின்மையைத் தவிர சொல்லும் செய்திதான் என்ன?

டாக்டர் கான் சாப், ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நிகழ்கால உதாரணம் என்பதில் பெருமையடைகிறேன். வெறுப்பு அரசியல்வாதிகள் அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு இடையே அமைதியாக தாங்கள் செய்திருக்கும் பணி மகத்தானது.

ஆகஸ்ட் 10 அன்றைய நள்ளிரவில், பிராணவாயு வினியோகத்துக்கான பிரதான குழாயில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. பிராணவாயுவின் அளவு குறைந்து போனதற்கான சிவப்பு அடையாள எச்சரிக்கை அது. உயிர்க்காக்கும் பிராணவாயுவின் அளவு ஓரிரு மணிநேரம்கூட தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் மருத்துவமனை பணியாளர்களும், மருத்துவர்களும் கைகளைப் பிசைந்து நின்ற கொடுமையான வேளை அது.

ஒரு குழந்தை மருத்துவரான நீங்கள் தாயுமானவராக அல்லவா அந்த நேரத்தில் மாறி நின்றீர்கள்..! எவ்வித பதட்டமும் படாமல் நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தீர்கள்..!

சீரான திட்டமிட்டீர்கள்..! நேரடியாக களத்தில் இறங்கினீர்கள்! ஒருவேளை திரும்பிவருவதற்குள் பிராணவாயு குறைந்து போனால்… செயற்கை சுவாசப் பைகளை (Ambu bag) பயன்படுத்தி குழந்தைகளை காக்க வேண்டும்! என்று கீழ்நிலை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தீர்கள்.

ஓடோடி சென்று பிராணவாயு உருளைகளுக்கான வினியோகஸ்தரிடம் கெஞ்சியிருக்கிறீர்கள். அதுவரையிலான பாக்கித் தொகை கணக்கு முடிக்காமல் பிராணவாயுவை வழங்க முடியாது என்று கை விரித்த வணிகரிடமிருந்து தோல்வியுடன் திரும்பிவந்த நீங்கள் அத்துடன் நிற்கவில்லை.

நட்பு ரீதியாய் அண்டை மருத்துவ மனைகளை அணுகி மூன்று பிராணவாயு உருளைகளை காரில் எடுத்து வருகிறீர்கள். அவற்றின் கொள்ளளவு வெறும் அரைமணி நேர பயன்பாடுதான்..!

காலை 6 மணி. பதற்றத்துடனேயே விடிகிறது. அவசர சிகிச்சைப் பெற்று வந்த பல குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் உயிருக்கு போராடும் தகவல் கேட்டு மீண்டும் பதறியடித்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாய் செல்கிறீர்கள். 12 பிராணவாயு சிலிண்டர்கள் மீண்டும் இரவலாக பெற்று வருகிறீர்கள். இதற்காக நான்குமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மனம் இளகிய பிராண வாயு வினியோகஸ்தர் ஒரு நிபந்தனையுடன் உருளைகளை தர முன்வருகிறார். மோடி சர்க்காரின் பணமில்லா வர்த்தகம் – காஷ்லெஸ் எகானமி ஏற்கனவே கேலியான நிலையில், கையில் பணம் கொடுத்து பிராணவாயு உருளைகளை வாங்கிச் செல்ல சம்மதிக்கிறார்.

உண்மையிலேயே உங்கள் தாய், தந்தையர் அற்புதமானவர்கள் டாக்டர் கான் சாப். இவ்வளவு தாராளமனம் கொண்டவராக உங்களை வளர்த்திருக்கிறார்கள்..! உடனுக்குடன் பத்தாயிரம் ரூபாய் சொந்த பணம் கொடுத்து, அதுவரையிலான போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிராணவாயு உருளைகளை நீங்கள் வரவழைத்திருக்கா விட்டால்… எங்கள் இளைய சிற்பிகளில் இன்னும் பலர் பரலோகம் சென்றிருப்பார்கள். எங்கள் தாய்மார்கள் ஆற்றாமையால் காலமெல்லாம் அழுதழுது புலம்பியிருப்பார்கள். எங்கள் ஆட்சியாளர்களோ வாக்குக்காக கிளிசரின் போடாமலேயே நீலிக் கண்ணீர் வடித்திருப்பார்கள்.

டாக்டர் கபீல் கானின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பண்பை கண்டுக் கொள்ள முடியாமல், இந்நேரம், அநேகமாய் இந்திய ஊடகங்கள் அனைத்தும், பார்வையிழந்திருக்கலாம். அந்த ஊடகங்களின் செவிப்புலன் பறிபோய் இருக்கலாம். அந்த ஊடகத்தார், வாய்ப்பேச முடியாமையால் தடுமாறியிருக்கலாம். அதனால், தாங்களும், தங்களின் அரிய சேவையும், அவர்களின் உலகாயதப் புலன்களுக்கு படாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த சில மணி நேரத்தில் நீங்கள் பெற்றிருக்கும் மன நிம்மதியும், பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆசிகளுக்கும், தங்களின் சகாக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அவற்றின் கனமும் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை டாக்டர்.

உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் விளம்பரத்துக்காக செய்யும் அரசியல்வாதி இல்லை என்பதே உண்மை. நீங்கள் சார்ந்த சமுதாயத்தின் இறந்த பெண்மணிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குங்கள் என்று ஆக்ரோஷமாய் முழக்கமிட்டு, மதவாதம் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றிய அதே உத்திரப் பிரதேசத்தில்தான் நீங்களும் பணியில் இருந்தீர்கள்.

உங்கள் உணவு எது? உறைவிடம் எது? கல்வி எது? உணர்வுகள் எவை? என்று உங்கள் வீட்டு உள்ளறைகள் வரை அத்துமீறி நுழைந்து, மூஸா காலத்து பனீஇஸ்வேரலர் சமுதாயம் ஒடுக்கப்பட்டதுபோல, கடும் சட்டங்களால் ஒடுக்கிக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் மத்தியில்தான் அன்றாடம் நடந்தீர்கள். ஆனாலும், உங்கள் தனித்துவமும், ஆளுமையும் எவரும் உங்களை மிஞ்ச முடியாதளவு உயர்ந்தது என்பது எவ்வித சந்தேகமுமில்லை.

மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு தர மறுக்கிறது இந்த ஓட்டுக்கான ஆட்சி அதிகாரம். அப்படி மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தால்…

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுப்பாடி தூங்க வைக்க வேண்டிய மழலையரை தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் பறிக் கொடுத்த தாய்மார்கள் இப்போது, ஒப்பாரி பாட வைத்துவிட்டார்களே நமது ஆட்சியாளர்கள். இனி, எதிர்கட்சிகளின் கூப்பாடுகள் விண்ணதிரும்..!

முதல்வர் அய்யா ஆதித்யாநாத்தும் அவரது மதவாத கும்பல்களும் மற்றொரு பக்கம் மக்களை திசைத்திருப்ப எத்தனிப்பார்கள். மீண்டும் தீவிரவாதம் என்பார்கள். குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். இந்தியர் மனங்களை ஒட்ட வைக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் சீர்க்குலைப்பாரகள். தாங்கள் முன்னெடுத்து குழந்தைகளை காத்திருக்கும் முயற்சிகளைக்கூட திசைத்திருப்பி உங்கள் மீதே குற்றம் சுமத்தி தூக்கு மேடையிலேற்றினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை டாக்டர்..!

இந்த அனைத்து களேபரத்தின் மத்தியிலும், நல்லதொரு மனிதனை, மருத்துவ சேகவரை கண்ட மகிழ்ச்சி என் மனதில் பொங்கி பிரவாகிக்கிறது.

எப்போதும் கான்கள் உலகுக்கானவர்கள் அல்ல. மனித சேவையில் இறைவனைக் காண்பவர்கள் என்பது பாலூட்டும்போதே அன்னை ஊட்டியது என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பெருமைப்பட முடிகிறது டாக்டர்.

நீங்கள் நீடூடி வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது டாக்டர் கபீல் கான். பெருமையோடு.

error: Content is protected !!