October 19, 2021

ரத்தக் கொதிப்பு , டெங்கு-க்குன்னே ஸ்பெஷல் இன்சூரன்ஸ் ஸ்கீம் இருக்குது தெரியுமா?

ஜாயிண்ட் ஃபேமிலி பெருகி இருந்த அந்த காலத்துலே வீடுலே ஒருத்தருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டிலுள்ள மூத்தவர்களின் கை வைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்… நொந்து போய் இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், ‘குடும்ப மருத்துவர்’ என்பதே மறைந்துவருகிறது.

isurence oct 15

தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சை நிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வோர் மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வோர் உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.

இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை. அப்படியே பார்ப்பதற்கும் ட்ரீட்மெண்ட் செய்வதற்கு போதிய ஃபீஸ் இல்லையென்ற நிலைதான் உள்ளது.

இதனிடையே நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ் (மருத்துவ காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே இன்றும் கருதிக் கொண்டிருக்கிறோம்.ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்? இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம் பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்ப நம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?

இத்தனைக்கும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதற்கேற்ப ஆட்-ஆன் பிரிமியங்களை கூட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. நோய் வந்தால் பொருளாதார ரீதியாக சமாளிக்க காப்பீடு எடுக்கின்றனர். தனி நபர் மற்றும் குடும்ப காப்பீடுகள் உள்ளன. இவற்றில் சாதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுத்தாலும், எல்லா நோய்களும் இதில் அடங்குவதில்லை. சில விதிவிலக்காக இருக்கின்றன. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பெரிதும் அச்சுறுத்தியது. தமிழகத்தில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர். இதுபோன்ற சீசன் நோய்களுக்கும் இன்சூரன்ஸ் உண்டு.

பெரும்பாலும் 2014-15 நிதியாண்டுக்கு பிறகு தொடங்கிய பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் டெங்கு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்கள் பெரும்பாலானவற்றில் டெங்கு சேர்க்கப்படவில்லை. ஒரு தனியார் இன்சூரன்ஸ் கடந்த ஆண்டு ஆட்-ஆன் இன்சூரன்ஸ் திட்டத்தில் டெங்குவை சேர்த்தது. இதில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மருத்துவ செலவுக்கான பிரீமியம் 444 முதல் 578 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6,300 பேர் பலன் பெற்றுள்ளனர். இதுதவிர முன் மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே 10,000 வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற இந்த மருத்துவ திட்டம் வகை செய்கிறது. இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் டெங்கு, சினக்குன்குனியா, ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கும் தனியாக ஆட்-ஆன் திட்டங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது