February 8, 2023

எம்பாப்பே எனும் எரிமலை!

மெஸ்ஸி,நெய்மர்,ரொனால்டோ,மோட்ரிச் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு மத்தியில் கால்பந்து உலகம் உரக்க உச்சரிக்கும் ஒரு பெயர் கிலியன் எம்பாப்பே. பிரான்ஸ் நட்சத்திர வீரராக கடந்த 4 வருடங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் எம்பாப்பே.23 வயதே ஆன ஒரு இளைஞன் எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை லாவகமாக தட்டிச் சென்று கோல் வலைக்குள் தள்ளுவதில் கில்லாடி இவர்.

ஆட்டம் முடிய பத்தோ,பதினைந்தோ நிமிடங்கள்.எல்லாம் முடிந்து விட்டது விட்டது என நினைத்த நேரத்தில் சில நிமிட இடைவெளியில் பேக் டூ பேக் கோல் அடித்து உலககோப்பை இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிற்கு மிகவும் நெருக்கடி கொடுத்தவர் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே.ஒரு ஆபத்துபாந்தவனாக அணியை 2-2 சமநிலைக்கு கொண்டு வந்து இறுதிப்போட்டிக்கான விறுவிறுப்பை கூட்டினார் எம்பாப்பே.

‘பிரான்ஸ் நிச்சயம் கோப்பையை வெல்லும் ‘என்ற பிரான்ஸ் ரசிகர்களின் நம்பிக்கைக்கு பின்னால் எம்பாப்பே இருந்தார்.அவரது துறுதுறுப்பான ஆட்டமும்,கோல் கம்பத்தை நோக்கி விறு,விறுவென முன்னேறி கோலாக்குவதுமான அவரது ஆட்ட நுணுக்கங்கள் சுவாரஸ்யமானது.50
வருடங்களுக்கு பிறகு அழுத்தம் நிறைந்த ஒரு இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இருக்கிறார்.

கத்தார் உலககோப்பையை பிரான்ஸ் வெல்ல முடியாமல் போனாலும்,இந்த தொடர் முழுவதுமான எம்பாப்பே ஆட்டம் அதிசயிக்கத்தக்கது.எத்தனை வீரர்கள் சுற்றி நின்றாலும் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு எம்பாப்பே கால்கள் பந்தை கடத்தி முன்னேறும்.அதற்கு திறமையும்,விடா முயற்சியும் தேவை அது எம்பாப்பேவிடம் அதிகம் இருக்கிறது. அது நேற்றைய போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.!

நூலிழையில் நழுவி போன கால்பந்து கோப்பைக்கு பதில் அவருக்கு தங்க ஷீ பரிசாக கிடைத்திருக்கிறது.

சொல்லப்போனால் கோப்பையை வெல்ல 100% வாய்ப்புள்ள அணியாக தான் பிரான்ஸ் இருந்திருக்கிறது. ஆனால் விளையாட்டில் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கை கொடுப்பதில்லையே. ‘எம்பாப்பே என்ற தனிமனிதனை வீழ்த்தி தான் அர்ஜெண்டினா கூட்டு முயற்சியாக கோப்பையை வென்று இருக்கிறது’அது தான் உண்மையும் கூட….!

மகாலிங்கம் கணபதி