January 25, 2022

ஆடு மேய்க்கும் பிழைப்பு – ஆனால் படிப்பு எம்.பி.ஏ – அசர வைக்கும் ஈரோடு இளைஞர்

கோவை, கொடீசியா வளாகத்தில் ஆண்டுதோறும் ‘கொடீசியா அக்ரி இன்டெக்ஸ்’ எனும் வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 18ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், இன்று அக்ரி இன்டெக்ஸ் மலர் வெளியீடு மற்றும் கருத்தரங்க துவக்க விழா நிகழ்வு நடந்தது. இந்த விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மேயர் ராஜ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு. வேளாண் தொழில், ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எஸ்.அருண்குமார் அமைத்துள்ள ஆடு வளர்ப்பு குறித்த அரங்கு கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே இடத்தில் திடகாத்திரமாக நிற்கும் ஆட்டில் இருந்து பாலை கறந்து தேநீர் தயாரித்து ரூ.20-க்கு ஒரு கோப்பையில் வழங்குகிறார். அரங்கில் அவர் நிறுத்தி வைத்துள்ள தலச்சேரி இனத்தைச் சேர்ந்த ஆடுகளும், குட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

kovai jy 17

கண்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றி வருபவர்கள், அவரது தொழில்முறை குறித்து விசாரித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கூடவே, சூடாக தேநீர் அருந்திச் செல்கின்றனர். வளர்ப்பதற்கு ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ரூ.350 என விலை நிர்ணயித்து ஆடுகள் விற்கப்படுகின்றன.அருண்குமார் வசம் தற்போது 200 தலச்சேரி ஆடுகள் இருக்கின்றன. தனது சொந்த ஊரிலேயே ஆட்டுப் பால் விற்பனையிலும், ஆடு விற்பனையிலும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கும் அவர், எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு களத்தில் இறங்கியது என்பதும் ஆடு வளர்ப்பில் சாதித்துள்ள அருண்குமார், ஆடு வளர்ப்பு ஓர் அனுபவக் கையேடு என்ற புத்தகத்தை ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறார். அரங்குக்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் அடிசினல் தகவல்

தொழில்முறை குறித்து அவரிடம் பேசிய போது, “என்னோட அப்பா கே.சுப்ரமணியம், கூலித்தொழிலாளி. தாயார் சிவகாமி. கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு முடித்தேன். படிப்பை முடித்ததும் அடுத்தவரிடம் சென்று வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. இந்த வேளாண் துறையில் தொழில் நடத்த வேண்டும் என்பது லட்சியம். தொடர்ந்து, பல்வேறுகட்ட யோசனைக்கு பின்னர் ஆடு வளர்ப்பில் இறங்கினேன். தொடக்கத்தில் கடன் வாங்கி ரூ.3 லட்சத்தில் கேரளம் சென்று 40 ஆடுகளை வாங்கி வந்தேன்.

ஆடு வளர்ப்பு குறித்து கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருந்தாலும் ஆடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன. அவற்றை நேர்த்தியாக பராமரித்து வருமானம் ஈட்டுவது என்பது, தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தும் முடியவில்லை. 2012-ம் ஆண்டு வரை இடர்பாடுகளை சந்தித்து வந்தேன். ஆனா இப்போ, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆட்டு பால் வயிற்றுப்புண், தைராய்டு நோய், உடல்சோர்வு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் போக்கும் என்பதால் பால் விற்பனை நன்றாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

தலச்சேரி ஆடுகள் மாமிச வகைக்கு உகந்தது. இரண்டு ஆண்டு கடந்த ஆட்டின் எடை மட்டும் 80 கிலோவை தாண்டி இருக்கும். இதில், நேர்த்தியுடன் இயங்குவதால் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது, 5 பணியாட்களை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.
எனது தாயாரும் உறுதுணையாக இருக்கிறார். இதைத்தவிர காங்கேயம் வகை நாட்டு மாடுகள் பராமரிப்பும் செய்து வருகிறேன். அதிலும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்