ஆம்னி பேருந்துகளில் அதன் சங்கம் சார்பில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்!

ஆம்னி பேருந்துகளில் அதன் சங்கம் சார்பில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்!

யுதபூஜை தொடங்கி தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக, ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

கொரோனா தொற்றுக்கு முன் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் மற்றும் சுற்றுலாவிற்கும் மொத்தம் 4,000 ஆம்னி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. கொரோனா தொற்றுக்குப் பின் தற்பொழுது தமிழ்நாட்டில் 1,500 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன. ஆம்னி பேருந்துகளில் அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருக்கை வசதி , படுக்கை வசதி , குளிர்சாதன வசதி என பேருந்துகளின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண விவரம்

உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்ல கட்டணம் குளிர்சாதன மில்லாத இருக்கை வசதிக்கு ரூ. 690 முதல் 1170 வரையிலும், குளிர்சாதனமில்லா படுக்கை வசதிக்கு ரூ.930 முதல் 1580 வரையும், குளிர்சாதன இருக்கைக்கு ரூ.870 முதல் ரூ.1490 வரையும், குளிர்சாதன படுக்கை வசதிக்கு ரூ.1170 முதல் 2000 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை – திருநெல்வேலிக்கு, குளிர்சாதன மில்லாத இருக்கை வசதிக்கு ரூ.870 முதல் 1490 வரையும், குளிர்சாதனமில்லா படுக்கை வசதிக்கு ரூ.1200 முதல் 2050 வரையும், குளிர்சாதன இருக்கைக்கு ரூ.1140 முதல் 1940 வரையும், ளிர்சாதன படுக்கை வசதிக்கு ரூ.1450 முதல் 2530 வரையும், சென்னை – கோவைக்கு குளிர்சாதனமில்லாத இருக்கை வசதிக்கு ரூ. 720 முதல் 1240 வரையும், குளிர்சாதனமில்லா படுக்கை வசதிக்கு ரூ. 990 முதல் 1690 வரையும், குளிர்சாதன இருக்கைக்கு ரூ.940 முதல் 1600 வரையும், குளிர்சாதன படுக்கை வசதிக்கு ரூ.1190 முதல் 2030 வரையும் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை குளிர்சாதனமில்லாத இருக்கை வசதி, குளிர்சாதன இருக்கை, குளிர்சாதனமில்லா படுக்கை வசதி, குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் “Premium Sleeper, Volvo/Scania Multiaxle Seater, Volvo/Scania Multiaxle Sleeper” என ஏழு வகையான பேருந்துகள் உள்ளன. இவ்வாறு இயங்கும் பேருந்துகளில் முதலீடு மற்றும் இயக்குவதற்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பேருந்துகள் ரூ.40 லட்சத்திலிருந்து மல்டி வால்வோ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வரை உள்ளன. ஆகையால் ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை.

ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளே பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணிக்கிறார்கள். அதனால் பயணிகள் விருப்பம் இல்லாமல் பயணிப்பதில்லை. அதனால் எந்தப் பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை.

இருந்த போதிலும் அரசுக்கும் இந்தத் தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டண விவரம் https://www.aoboa.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனிவரும் விழா காலங்களில் இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க அனைத்து உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த விழா காலங்களிலும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இதற்கு அதிகமான கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரி மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!