June 21, 2021

முழுக்க முழுக்க பெண் பணியாளர்களைக்கொண்ட ரயில்வே ஸ்டேஷன்!

ஒரு விஷயம்  தெரியுமா? ஒலகத்திலேயே முதல் பெண்கள் சிறப்பு புறநகர் ரயில் சேவை நம்ம நாட்டுலேதான் தொடங்கிச்சு. மேற்கு ரயில்வே மே 5, 1992ஆம் ஆண்டு பெண் பயணிகளுக்கான முதல் ரயில் சேவையை இயக்கத் தொடங்கியது. இதுதான் உலகின் முதல் பெண் பயணிகளுக்கான ரயில் சேவையாக இருந்துச்சு.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர், “இந்த சேவையானது சர்ச்கேட் மற்றும் போரிவிளிக்கு இடையில் தொடங்கப்பட்டது. பின்னர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை யடுத்து விரார் வரை சேவை விரிவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பெண் பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்” என கூறியுள்ளார். மேலும் ரயில் சேவையின் ஒரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது. இந்த சேவை பெண் பயணிகளுக்கான ஒரு வரம். 1990களில் மும்பை தெற்குப் பகுதி பெருமளவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் வளர்ச்சியடைந்தது. இதனையடுத்து உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் இந்த பெண்கள் சிறப்பு ரயில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்தது என கூறி இருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தற்போது மத்திய ரெயில்வே நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மகாராஷ்டிர மாநில ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மட்டுங்கா ரெயில் நிலையம் மும்பை நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க மத்திய ரெயில்வே துறையின் பொது மேலாளர் டி.கே. ஷர்மா திட்டமிட்டார். இதையடுத்து, பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர், ரெயில்வே போலீசார், சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என 41 பேர் மட்டுங்கா ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா குல்கர்னி என்பவர் தலைமையில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்த குழுவினர் கடந்த ஆறுமாத காலமாக மட்டுங்கா ரெயில் நிலைய நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பதுதான் ஹைலைட்.