முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த (என்95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்)முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் போன்றவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்து கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம், கையுறை ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பிரிவில் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது.
இந்த வகைப் பொருட்களைப் பதுக்குவதோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்திருந்தது. ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு 100 நாட்களைக் கடந்து 7 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலி்ல் இருந்து முகக்கவசம், சானிடைசர் இரு பொருட்களையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் இனிமேல் இரு பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்ப ஏற்றுமதி செய்யவதில் தடை ஏதும் இருக்காது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் நிருபர்களிடம் கூறுகையில், மார்ச் 13-ம் தேதி முதல் 100 நாட்களுக்கும் மேலாக சானிடைசர், முகக்கவசம் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.
தேவையான அளவு தற்போது இரு பொருட்களும் மக்களுக்கு கிடைக்கின்றன. இந்த முடிவு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்புதான் எடுக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது, சானடைசர் இருக்கிறது என்று தெரியவந்தபின்புதான் இந்த உத்தரவு பிறப்பிக்ப்பட்டது எனத் தெரிவித்தார்