மேரி கோம்: – சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடம்!
5 முறை ஆசிய சாம்பியன், 5 முறை உலக சாம்பியன் , ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என அசைக்கமுடியா இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்து வரும் நிலையில், சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் குத்துசண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஆறாவது முறையாக மேரி கோம் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற மேரி கோம் தயாராகி வருகிறார். 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்ஸில் இல்லாததால், 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன், அவர் 51 கிலோ எடைப்பிரிவுக்கு தகுதி பெற வேண்டும்.
உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற சிம்ரன்ஜீத் கவுர் 64 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தையும், 57 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் வெள்ளி வீராங்கனை சோனியா லாதர் 2வது இடத்தையும், 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கல வீராங்கனை லொவினா பொர்கோ ஹைன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.