மருத – பட விமர்சனம்!

மருத – பட விமர்சனம்!

மிழகத்தின் தொன்மையான நகரமான மதுரைக்கு மல்லிகை மாநகர், கூடல் நகர், நான்மாடக்கூடல், ஆலவாய், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் , தூங்கா நகரம் என்பனவற்றுடன் மருத என்றே பேச்சுவழக்கில் அழைப்பார்கள்.இந்த மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் மொய்விருந்து என்றழைக்கப்படும் ‘செய்முறை’ நிகழ்வொன்றை விழா அளவில் நடதுவதும் அந்த விழாவால் தற்கொலை, கொலை போன்ற சம்வங்கள் நிகழ்வதும் வாடிக்கை. அப்படியான ஒரு சம்பவத்தை (அநேகமாக உண்மை சம்பவமாகவே இருக்கும்) மண் மணம் மாறாமல் அதே சமயம் தொண்டை கிழிய இரண்டரை மணி நேரத்துக்கு கத்தி பேசியபடியே ஒரு படத்தை வழங்கி இருக்கிறார் பாரதிராஜாவின் அசிஸ்டெண்டா இருந்தவர் டைரக்டராகி இருக்கும் ஜி ஆர் எஸ்.

கதை என்னவென்றால் ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு ராதிகாவின் அண்ணன் சரவணன் செய்முறை செய்கிறார். அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை எதுவும் செய்யாமல் விடுகின்றனர். இதனால் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர் கோபத்தில் கன்னபின்னாவென்று ஆவேசமாகி ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்துகிறார். அதில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு சரவணன் குடும்பத்திற்கும் ராதிகா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இவர்களின் குடும்பம் இணைந்ததா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். . இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்க வில்லை. ஆனால், திரைப்படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார். பருத்திவீரன் சரவணன், அவரது தங்கையாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், மாரிமுத்து, வேலராமமூர்த்தி என அனைத்து நடிகர்களின் நடிப்பிலும் மதுரை மண் மனம் வீசுகிறது. ஒரு சில காட்சிகளில் வரும் கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். விஜி சந்திரசேகரின் நடிப்பு அகோரம். தொண்டை கிழிய கத்துவதில் முதலிடம் பிடிக்கிறார். சினிமாவில் நடிப்பு என்பது இது அல்ல என்பதை ராதிகாவாவது எடுத்துச் சொல்லி இருக்கலாம்

பட்டுக்கோட்டை ரமேஷ்.பி-யின் ஒளிப்பதிவு ஓ கே. . இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

கதையுடன் இயக்கியிருக்கும் ஜி.ஆர்.எஸ் மதுரை மக்களிடையே நிலவும் செய்முறை கலாச்சாரத்தின் பின்னணியையும், பெருமைக்காக செய்முறை செய்து விட்டு கடனாளியாக தவிப்பவர்களின் கண்ணீரையும், செய்முறை என்ற பெயரில் கந்துவட்டிக்காரர்களாக செயல்படுபவர்களின் கொடுமையையும் தைரியமாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

அதே சமயம் படத்தின் நீளத்தையும், வசன உச்சரிப்பின் ஒலியையும் குறைத்து, திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்

மொத்தத்தில் மருத – ஒருமுறைப் பார்க்கலாம்

மார்க் 2.75 / 5

error: Content is protected !!