October 17, 2021

ராஜ்யசபாவில், ‘மார்ஷல்’களுக்கான சீருடை மாற்றம் திரும்ப பெறப்பட்டதாக தகவல்!

எம்.பி.க்களிடம் இருந்து மட்டுமில்லாமல் ராணுவ அதிகாரிகளிடம் இருந்தும் வந்த கடும் எதிர்ப்பு காரணமாக ராஜ்யசபாவில், ‘மார்ஷல்’களுக்கான சீருடை மாற்றம் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியானது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவைகளிலும் சபாநாயகருக்கு அருகே உயரமாக நிற்கும் நபர்களைக் மார்ஷல் என அழைக்கப்படுகின்றனர். சபாநாயகருக்கு இடது புறம் நிற்பவர் மார்ஷல் என்று அழைக்கப்படுவார். மற்றொருவர் துணை மார்ஷல் எனப்படுவார். இவர்கள் அவையில் வரம்பு மீறி நடந்துகொள்ளும் நபர்களை வெளியேற்றும் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்றுவர். அதேசமயம் சபாநாயகரை நோக்கி அத்துமீறி வருபவர்களையும் தடுத்து நிறுத்துவர். இதனால், அவை நடப்பதற்கு சபாநாயகருக்கு மிகவும் உறுதுணையாக இவர்கள் விளங்கி வருகின்றனர். இவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவர்.

இது போன்ற மார்ஷல் மற்றும் துணை மார்ஷல்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின் படி சீருடை அணிந்து வருவது வழக்கமாகும். இந்த நடைமுறை மீராகுமார் சபாநாயகராக இருக்கும் போது மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஒரேமாதிரியான சீருடை அணிந்து வந்தனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சஃபாரி ஆடை மற்றும் நீண்ட தலைப் பாகை அணிந்திருந்த நிலையில், இம்முறை அவர்களது சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அணிவது போன்ற சீருடையுடன் மார்ஷல்கள் காணப்பட்டனர். இந்த புதிய சீருடை மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலருடன் மிலிட்டரி ஆபீசர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எதிர் கட்சிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என ராஜ்யசபா துணை தலைவர் வெங்கையா தெரிவித்தார். இந்நிலையில்தான் மார்ஷல்களுக்கான ராணுவம் போன்ற சீருடை திடீரென திரும்ப பெறப் படுவதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் முந்தைய சீருடையுடன் காவலர்கள் பணிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்க்து.