பெரியார் & மணியம்மை திருமணம் : சீமானுக்கு பதிலடி!

பெரியார் & மணியம்மை திருமணம் : சீமானுக்கு பதிலடி!

“தன் சொத்தைக் காப்பாற்றுவதற்காக 70 வயதில் திருமணம் செய்து கொண்டவரெல்லாம் புரட்சியாளரா?” என்று கேட்டிருக்கிறார் சீமான். சீமான் இப்படி பேசுவது நமக்கொன்றும் புதிதாகத் தோன்றவில்லை. யாருக்கு வாலாட்டுவது என்பது அவர் விருப்பம். ஆனால் வாயிருக்கிறது என்பதற்காகக் கண்ட இடத்தில் குரைத்துக் கொண்டிருத்தல் அவருக்கு நல்லதல்ல. சொத்தைக் காப்பாற்றத் திருமணம் செய்த பெரியார், அத்தனை சொத்துக்களையும், தன் சொந்தங்களுக்கா எழுதி வைத்தார்? 70 வயதில் பெண்டாட்டி கட்டி, பிள்ளை பெற வேண்டும் என்று நினைத்தாரா?

இந்த மக்களுக்குச் சுயமரியாதை உணர்வையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்காகத் தன்னுடைய சொந்த சொத்துக்களையும், மக்களால் தனக்கென்று அளிக்கப்பட்ட நன்கொடைகளையும் சேர்த்துப் பாதுகாத்துப் பெருக்கி, அவற்றைப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமாக ஆக்கி, இன்றைக்கும் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த அறக்கட்டளையாக உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார். தன் சொந்தக்காரர்களுக்குப் போய்ச் சேரட்டும். தன் அண்ணன் மக்களுக்குப் போய் சேரட்டும் என்று கருதி இருந்தால், 75 ஆண்டுகளுக்குப் பின்னாலும் இந்த ஈத்தரைகளால் தூற்றப்படும் ஒரு ஏற்பாட்டை அவர் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்தச் சொத்துக்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, தன்னை இழி சொற்களும் பொய்யுரைகளும் வந்து சேரும் என்று தெரிந்த பின்பும் கூட, துணிச்சலுடன் முடிவெடுத்த தலைவர் பெரியார். இந்தத் தியாகத்திற்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக வேங்கை அன்னை மணியம்மையார். அரசியலுக்குச் செல்வதற்காக இந்தத் திருமணத்தை ஒரு வாய்ப்பாகக் கருதிக் கொண்டு இயக்கம் தொடங்கிய அறிஞர் அண்ணா கூட, பின்னாளில் அந்தத் திருமணத்தினால் இந்தச் சமூகத்திற்கு விளைந்த பயன் என்ன என்பதைச் செப்புப் பட்டயத்தைப் போல எழுதி வைத்து விட்டுத்தான் மறைந்தார்கள். கலைஞர், பேராசிரியர் உள்ளிட்ட திமுக தலைவர்கள் எல்லாம் தாங்கள் அந்தத் திருமணத்தை எதிர்த்த காரணத்தை எப்போதோ ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இதையே வாய்ப்பாகக் கொண்டு, பெரியார் – மணியம்மையார் என்னும் அந்த இரு பெரும் தலைவர்களைக் கொச்சைப்படுத்தக் காலம் காலமாக முயன்றவர்கள் எல்லாம் அவர்களின் தியாக வரலாற்றின் சுவடுகளில் தூசாகிப் போய் விட்டார்கள். தந்தை பெரியார் தம் தன்மான இயக்கத்தைக் காக்க செய்த ஏற்பாடுகளுள் ஒன்று அன்னை மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது. அந்தச் சுயமரியாதை இயக்கத்தால் யாருக்கு நட்டம் ஏற்பட்டதோ, அந்த அக்ரஹாரக் குரல்கள் பெரியார் – மணியம்மையார் திருமணத்தைக் கொச்சைப்படுத்த இன்றும் முயல்கின்றன.

தந்தை பெரியாரின் தத்துவங்களை எதிர்த்து நிற்க முடியாத சோதாக்கள், இதைப் பிடித்துத் தொங்கியாவது பெரியாரை அவதூறு செய்யலாமா என்று இன்றும் முனைந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கலாமா என்று சீமான் பார்க்கிறார். வாழ்த்துகள்! வரலாறு காறி உமிழப் போகும் தமிழினத்தின் விபீஷணப் பட்டியலில் முதலிடத்திற்கு முந்திக் கொண்டிருக்கிறீர்கள் சீமான்.

Prince Ennares Periyar

error: Content is protected !!