பேஸ்புக், வாட்ஸ்அப் & இன்ஸ்டாகிராம் சேவை முடக்கத்தால் 52 ஆயிரம் கோடி இழப்பாம்!

பேஸ்புக், வாட்ஸ்அப் & இன்ஸ்டாகிராம் சேவை முடக்கத்தால் 52 ஆயிரம் கோடி இழப்பாம்!

பொதுமக்களுக்கு எளிதில் தகவல் சென்றடைவதற்காக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இன்றைய சூழலில் சமூக வலைதளங்கம் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திடீரென்று முக்கிய சில சமூக வலைதளங்கள் முடங்கிபோனது. இந்த சமூக வலைத்தள முடக்கம் இரவிலும் தொடர்ந்ததால் பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதிலும், பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான மார்க் சக்கர்பெர்க் 7 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் அவற்றை சார்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதை அடுத்து, சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதன் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 120.9 பில்லியன் டாலராக குறைந்தது. மேலும் உலக பணக்காரர் வரிசையில் பில் கேட்ஸுக்கு கீழாக அடுத்த இடத்தில் 5வது இடத்துக்கு மார்க் சென்றுள்ளார். மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதியில் இருந்து இதுவரை 19 பில்லியன் டாலர் இழப்பை அவர் சந்தித்துள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் (Downdetector) நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!