October 24, 2021

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? – திரை விமர்சனம் = ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம்!.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தினந்தோறும்  பரபரப்பான குற்றச் சம்பவங்களுக்கு கொஞ் சம் கூட பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் எது நடந்தாலும் தொடர்ச்சியாக நடந்து பீதியை ஏற்படுத்துவது என்பது வாடிக்கையாகவே மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீரோ புல்லிங் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டினர்.  இது தினசரியே நடந்து கொண்டிருந்தது. அது போல் வட பழனி பகுதியில் சைகோ கொலையாளி ஒருவன் சாலையோரம் தூங்குபவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தான். இப்படி எந்த குற்றச் சம்பவங்களாக இருந்தாலும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தும் வகையிலேயே அரங்கேறி வந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது நாடெங்கும் செயின் பறிப்பு சீசன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை என்றில்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் குறைந்தது 500 பெண்களாவது தங்களது தாலிச்செயினை பறி கொடுக்க வேண்டும் என் பது இப்போது தலைவிதியாகவே மாறிப் போய் இருக்கிறது. இப்படியான சூழலில் இந்த செயின் பறிப்பு க்ரைம் பற்றி ஓர் ஆழமான அலசலுடன் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன தலைப்பில் ஒரு திரைப்படமே வந்து  தனி கவனம் பெற்று விட்டது..

ஆம்.. தற்போது கல்லூரி மாணவர்கள் உள்பட இது போன்று செயின் பறிக்க திட்டமிடும் திருடர்கள் எப்படிப்பட்ட பெண்களை குறி வைக்கிறார்கள், செயின் அடித்து விட்டு ஓடும் போது மாட்டிக் கொள்ளாமல் இருக்க எப்படிப்பட்ட முன்னேற்பாடுகளை அவர்கள் செய்கிறார்கள், இப்படி அடித்து வரும் நகைகள் எங்கு செல்கிறது? அதற்கு பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளிகள், செயின் அடித்து செல்லும் குற்றவாளிகள் கொலை முயற்சி தண்டனைக்கும் உட்பட்டவர்கள் தான் போன்ற விஷயங்களை மையப்படுத்தி ’பெண் இரவு பன்னிரெண்டு மணிக்கு அல்ல, பகல் பன்னிரெண்டு மணிக்கே ரோட்டில் தனியாக நடந்து செல்ல முடியாது’ என்ற அவலத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் படமிது!

படத்தின் கதை என்னவென்று கேட்டால்  நகை பறிக்கும் கும்பல் மைம் கோபி-ராம்ஸ் கூட்டாளி கள்.. ஒரு சூழலில் இவர்களிடம் இருந்தே ஒரு நகையை அபேஸ் செய்கிறார் நாயகன் துருவா. பின்னர் ஒரு சமயம் அந்த நகை பறிக்கும் கும்பலிடம் சிக்கிய நிலையில், நாயகனின் திறமையை பார்த்து தங்கள் கூட்டத்திலேயே துருவாவையும் இணைத்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் கமிஷனரின் மனைவியிடம் செயின் பறிப்பில் துருவா ஈடுபடும் போது துரதிர்ஷடவசமாக அவரை காதலிக்கும் ஐஸ்வர்யா தத் கண்களில் பட்டு விடுகிறார்.. கொஞ்ச மாதங்களுக்கு முன் சிலிண்டர் போடும் வேலை பார்த்து வந்த அப்பாவி மூஞ்சு துருவா, அத்துடன் தன்னிடம் செயினை பறித்த வனை விரட்டியடித்து செயினை மீட்ட அந்த துருவா ஏன் இப்படி செயின் பறிப்பு ஆசாமியாக மாறினார் என அதிர்ச்சியாகிறார் ஐஸ்வர்யா.

இதனால் குழம்பிப் போன ஐஸ்வர்யா இந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியான சக்கரவர்த்தியிடம் உண்மையை சொல்வதற்காக செல்லும் இடத்தில், அந்த துருவாவும் அதிகாரியும் நட்பாக இருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சியாகிறார். ஆக அப்பாவி துருவா செயின் பறிப்பு ஆசாமியாக மாறியது ஏன்.? அவருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் என்ன தொடர்பு? நாயகனின் காதல் என்னாச்சு என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் கதை.

நாயகன் துருவா தன் கேரக்டர் புரிந்து பாசமிகு மகன், வீரமும், கோபமும் கொண்ட  இளைஞர் என படு கேஷுவலாக நடித்து அசத்தியுள்ளார். நாயகிகளாக ஐஸ்வர்யா தத், அஞ்சனா பிரேம்..ஓ கே.. வெளிப்படுத்தி இருக்கிறார் அஞ்சனா பிரேம். அம்மா ரோலுக்காகவே தன்னை அர்பணித்து கொண்ட சரண்யா.. இந்தப்படத்தில் வீட்டுமனை பார்ப்பதாக சொல்லி கோவில் கோவிலாக அவர் ட்ரிப் அடிக்கும் வித்தை சிரிப்பை வரவழைக்கிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு, அச்சு ராஜாமணியின் இசை, ராம்போ விமலின் சண்டை காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது

மொத்தத்தில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் என்பது அவர்களையும் அறியாமல் கொலை முயற்சி சம்பவமாகவும் மாறிவிடும் கொடூரத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்லி அதனாலேயே இந்த சங்கிலி பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனை இப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கிளைமாக்ஸும், கூடவே நகை மீது மோகம் கொண்ட பெண்களுக்கு பயத்தையும், எச்சரிக்கையையும் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ள இப்படம் ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம்.

மார்க் 5 / 3.50