மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம் – விமர்சனம்!

மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம் – விமர்சனம்!

சினிமா என்பது பொழுது போக்கு ஊடகம்தான் என்றாலும் நம் நாட்டு சினிமாவின் தொடக்க காலங்களில் சரித்திரப் படங்களும் மன்னர் காலத்துப் படங்களும் மட்டுமே வந்து கொண்டிருந்தன. இடையிடையே வெளியுலகுக்கு அறியாத வீரத் திருமகன் கதைகளும் அரங்கேறியது. பின்னர் ஒரு சூழலில்நிகழ்கால சமூகக் கதைகளும் படமாகத் தொடங்கின. அதே சமயம் வருடத்துக்கு சில மன்னர் காலம் மற்றும் வெள்ளையர்களுடான முறுக்குக் கொண்ட படங்கள் தயார் ஆகிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் 1980களில் திரைத் துறையில் நுழைந்த புதுப் படைப்பாளிகளின் தாக்கம் மற்றும் ரசனை மாற்றத்தால் மன்னர் காலப் படங்களும் சரித்திரப் படங்களும் அரிதாகிவிட்டன. அதை போக்கும் விதத்தில் மோலிவுட்டின் டாப் 5ல் ஒருவராக இருக்கும் டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இதில் மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிச்சிருக்காய்ங்க. வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கார். அதாவது 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றிருந்தது இந்த மரைக்காயர் படம்.

படத்தின் கதையை சொல்வதானால் அப்பா இல்லாத அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளரும் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர் (மோகன்லால்). இவர் கோழிக்கோடு நாட்டில் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட் ரேஞ்சில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வாலிபனாகி விட்ட இவருக்கு திருமணம் நடப்பதற்கு முதல் நாள், மணபெண்ணான கல்யாணி பிரியதர்ஷன் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்ச்சுகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் கொல்கின்றனர். இந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் மோகன்லால். அப்போதும் ஆட்சியாளர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு கொடுக்கிறார். இதனிடையே போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் மோகன்லாலின் உதவியை நாடுகிறார். இறுதியில் மோகன்லால், சாமுத்ரி அரசருடன் இணைந்து போர்ச்சுகீசிய படைகளை எதிர்கொள்வதால் நேரும் ஏகப்பட்ட சம்பவங்களே இது.

படம் முழுக்க பிரமாண்டம்,, பிரமாண்டம்.. பிரமாண்டம் மட்டுமே.!. அதிலும் ஒவ்வொரு காட்சியமைப்பும், பின்னணி இசையும், சண்டைக் காட்சிகளும் நம்மை மறந்து கைத் தட்ட வைக்கிறது. இவைகளை சாத்தியமாக்கி இப்படத்தின் நிஜ ஹீரோக்களான கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோருக்கு தனிப் பாராட்டு விழாவே வைக்க வேண்டும்.. மோகன்லால் தங் பங்களிப்பை முழுமையாக செய்திருக்கிறார். அவரை விட இளவயது குஞ்சாலியாக வரும் மோகன்லால் மகன் ஸ்கோர் செய்கிறார்..

அதே சமயம் படத்தில் ஏகப்ப்ட்ட நடிகர் நடிகைகள் இருந்தும் அவர்கள் யாருக்குமே பாத்திரப் படைப்பு சரியாக அமையாமல் போனது சோகம். கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, ஹரீஷ் பெரடி, சுனில் ஷெட்டி என அனைவரது கதாபாத்திரங்களும் சரியாக பயன்படுத்தபடவில்லை. சொல்ல வந்த திரைக்கதையில் அக்கறை காட்டாமல் படமாக்கி இவ்வளவு பெரிய பிராஜெக்டை எடுபடவிடாமல் செய்து விட்ட தவறை செய்து விட்டார் இயக்குநர் பிரியதர்சன்.

படத்துக்கு ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல் ஆகியோர் இசையமைத்து இருக்கிறார்கள். ஒரு வரலாற்றுப் படம என்பதை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்..

ஆனாலும் மரைக்காயரை திரும்ப அல்லது திரும்பிப் பார்க்கக் கூட ஆர்மில்லை என்பதே நிஜம்

மார்க் 2.75 / 5

error: Content is protected !!