டெல்லி எம்எல்ஏ-க்களில் 28% தான் கொஞ்சம் ஆக்டிவ்! – சர்வே ரிசல்ட்

டெல்லி எம்எல்ஏ-க்களில் 28% தான் கொஞ்சம் ஆக்டிவ்! – சர்வே ரிசல்ட்

டெல்லி எம்எல்ஏக்களில் 72 சதவீதம் பேர், மக்கள் பிரச்னைகளை பேரவையில் எழுப்புவதில் சிறப்பாக செயல்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிரஜா ஃபவுன்டேஷன் என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது. 2015, பிப்ரவரி 24-ம் தேதி முதல் 2015 டிசம்பர் 22 வரையிலான காலக்கட்டத்தில் டெல்லி சட்டப்பேரவையில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் கள், 29,950 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடுவதாக பிரஜா ஃபவுன்டேஷன் தெரிவித்துள்ளது.

delhi oct 7

அந்த அறிக்கையின் விவரம் இதோ:

2015ஆம் ஆண்டு டெல்லி பேரவையில் நடைபெற்ற விவாதங்களில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 33 சதவீத எம்எல்ஏக்கள் மிகக் குறைவாகவே பங்கேற்றுள்ளனர். கொசுப் பெருக்கம் அதிகமாக உள்ளதாக 10,102 புகார்கள் வந்த பின்பும் டெல்லி அரசும், டெல்லி மாநகராட்சிகளும் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை டெல்லி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் எழுப்பவும் இல்லை. மக்கள் பிரச்னைகளை டெல்லி சட்டப்பேரவையில எழுப்புவதில் 72 சதவீத எம்எல்ஏக்கள் சரிவர செயல்படவில்லை.

இவர்களைக் காட்டிலும் மும்பை பேரவை உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் எஸ்.கே. பக்கா, நிதின் தியாகி மற்றும் பாஜகவின் ஜெகதீஷ் பிரதான் ஆகியோர் சிறப்பாக செயல்படும் எம்எல்ஏக்களின் பட்டியலில் சிறப்பிடத்தை பெற்றுள்ளனர்.

டெல்லி முதல்வர் கேஜரிவால், பிற அமைச்சர்கள், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தவிர ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுக்கு 58.44 சதவீத ஆதரவு வாக்குகளும், பாஜக எம்எல்ஏக்களுக்கு 66.04 சதவீத ஆதரவு வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2015, பிப்ரவரி 24-ம் தேதி முதல் 2015 டிசம்பர் 22 வரையிலான காலக்கட்டத்தில் டெல்லி சட்டப்பேரவை 26 நாள்கள் நடைபெற்றுள்ளது. அதில் 58 எம்எல்ஏக்கள் 951 மக்கள் பிரச்னைகளை எழுப்பி உள்ளனர். அதே காலக்கட்டத்தில் 50 நாள்கள் நடைபெற்ற மும்பை சட்டப்பேரவையில் 31 எம்எல்ஏக்கள் 4,343 பிரச்னைகளை எழுப்பி உள்ளனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சராசரியாக 12 பிரச்னைகளை எழுப்பி உள்ளனர். மும்பையில் ஆளும் பாஜக மற்றும் சிவசேனை கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சராசரியாக 69 பிரச்னைகளை எழுப்பி உள்ளது.

டெல்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக 1,50,885 புகார்கள் பதிவாகியிருந்த போதிலும் 33 முறை மட்டுமே டெல்லி எம்எல்ஏக்கள் அவையில் எழுப்பி உள்ளனர். அதேபோல் கழிவு நீர் பிரச்னை தொடர்பாக 19,327 புகார்கள் பதிவாகியிருந்த போதிலும் அந்த விவகாரம் 5 முறை மட்டுமே பேரவையில் எழுப்பப்பட்டுள்ளது. ஊழலற்ற அரசியலை முன்வைத்து டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி அரசில் உள்ள 20 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதன் மூலம் பிற கட்சிகளைப் போன்றே ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!