October 5, 2022

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவா முதல்வராக இருந்துவந்த மனோகர் கோபாலகிருஷ்ண பிரபு பரிக்கருக்கு வயது 63. கணையப் புற்றுநோய் பாதிப்பின் காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். மும்பை, டெல்லி, நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஒரு மாதமாகவே கோவாவின் பனாஜியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்துவந்தது. நேற்று காலையில் மனோகர் பரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதனையடுத்து அவர் மரணமடைந்துவிட்டதாக அவரது அலுவலகத்திலிருந்து நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. உடல்நலம் மிகவும் குன்றிய நிலையிலும்கூட பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலில் மனோகர் பரிக்கர் கலந்துகொண்டார். ஜனவரி மாதத்தில், ”என்னுடைய கடைசி மூச்சு வரை நான் கோவாவுக்காகச் சேவை செய்வேன்” என்று உறுதியோடு கூறியிருந்தார்.

இவருக்கு இரண்டு மகன்களும், பேரக் குழந்தையும் உள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பும் இவர் மூன்று முறை கோவா முதல்வராக இருந்துள்ளார். 2000ஆம் ஆண்டில் 16 மாதங்களும், 2002ஆம் ஆண்டில் 2 ஆண்டுகள் 8 மாதங்களும், 2012ஆம் ஆண்டிலும் இவர் கோவா முதல்வராக இருந்துள்ளார். சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து அதன் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தவர்.

இவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் காலமானது குறித்து மிகவும் வருந்துகிறேன். பொது வாழ்வில் அவருடைய நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட சேவையை கோவா மக்களும், இந்திய மக்களும் மறக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, “மனோகர் பரிக்கர் ஈடுஇணையற்றவர். உண்மையான தேசபக்தர். தனித்துவமான நிர்வாகத் திறன் படைத்தவர். அனைவராலும் கவரப்பட்டவர். நாட்டுக்கு அவருடைய உயர்வான சேவை பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். அவரது இறப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக மனோகர் பரிக்கர் ஆற்றிய பணிக்கு இந்தியா எக்காலத்திலும் நன்றி செலுத்தும். அவரது பதவிக் காலத்தில் தொடர்ந்து பல முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியாவின் பாதுகாப்பு சக்திகளைப் பலப்படுத்தினார். உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவித்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, “மனோகர் பரிக்கரின் இறப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த நாடு உண்மையான தேசபக்தரை இழந்துள்ளது. அவர் இந்த நாட்டுக்காகவும், ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் தன்னலமின்றி உழைத்தார். மக்களுக்கான அவருடைய அர்ப்பணிப்பும், கடமையும் அனைவராலும் பின்பற்றத்தக்கது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மனோகர் பரிக்கரின் மரணச் செய்தி மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. கடுமையான வியாதிக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாகப் போராடியுள்ளார். கட்சியில் எல்லோராலும் பாராட்டக்கூடிய நபராகவும், மரியாதைக்குரிய நபராகவும் இருந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.