December 6, 2022

நாட்டு நாய் வளர்க்கலாம்: தஞ்சாவூர் பொம்மையை ரசிக்கலாம் – மோடி ரேடியோ பேச்சு!

கடந்த 2014–ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றிய விசயம் இவைதான்:

‘‘இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது. பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காலம் இது. 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.

`உலக அளவில் விளையாட்டு பொம்மைகளுக்கான சந்தை என்பது ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மதிப்புகொண்டது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கு என்பது மிகவும் குறைவு. விளையாட்டு பொம்மைகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கைகோக்க வேண்டும். உள்ளூர் விளையாட்டு பொம்மைகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம். கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.

உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது, குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.

பேரிடர் மீட்பு பணிகளின்போது வீரர்களின் துரிதமான பணிக்கு நாய்களின் பங்கு மிக முக்கியமானது. இந்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். பொதுமக்களும் நாட்டு நாய்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கான செலவினமும் குறைவானது.இந்தியரக நாய்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரக நாய்களில் Mudhol Houndகள், ஹிமாச்சலில் ஹவுண்டுகள் இருக்கின்றன, இவை மிகவும் அருமையான ரகங்கள். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவற்றைப் பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதில்லை, இவை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன.

நமது பாதுகாப்புப் படையினர் இந்த இந்தியரக நாய்களைத் தங்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். கடந்த சில காலமாகவே இராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தேசியப் பாதுகாப்புக் குழு ஆகியோர் முதோல் ஹவுண்ட் ரக நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவற்றை நாய் படைப்பிரிவில் இணைத்திருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் கோம்பை ரக நாய்களை சேர்த்திருக்கிறார்கள்.

இந்திய விவசாய ஆய்வுக் கழகமும் இந்திய ரக நாய்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்தியரக நாய்களை, மேலும் சிறப்பானவையாக ஆக்குவதும், பயன் உள்ளவையாக ஆக்குவதும் தான் இதன் நோக்கம். நீங்கள் இணையதளத்தில் இவை பற்றித் தேடிப் பாருங்கள், இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றின் நேர்த்தி, குணங்கள் ஆகியவற்றைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரிய உணர்வு மேலிடும். அடுத்தமுறை, நாய் வளர்ப்பு பற்றி நீங்கள் எண்ணமிடும் போது, கண்டிப்பாக இவற்றில் ஏதாவது ஒரு இந்திய ரக நாயை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். தற்சார்பு பாரதம், மக்களின் மனங்களில் மந்திரமாக ஒலிக்கும் போது, எந்த ஒரு துறையும் இதிலிருந்து விடுபட முடியாது

கல்வி, அறிவுத்திறன், உடற்பயிற்சி என மக்கள் வாழ்க்கைமுறையை எளியமையாக்க ஏராளமான செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசுத்திட்டங்களை தங்களது தாய் மொழியில், எழுத்து,’’ ஆடியோ, விடியோவாக தெரிந்துகொள்ளும் வகையில் அரசு செயலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட உள்ளது. ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஓணம் பண்டிகையை நாட்டு மக்கள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஓணம் பண்டிகையின்போது வீடுகளை பூக்களால் மக்கள் அலங்கரிப்பார்கள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். பண்டிகையை கொண்டாடும்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

இன்னும் சில நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாட உள்ளோம். கரோனா காலத்தில் இந்திய ஆசிரியர்கள் மிக சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.