September 29, 2021

வாக்களிக்க வந்துடுங்க ; இல்லேண்ணா வருத்தப்படுவீங்க! – மோடி ரேடியோ பேச்சு!

இந்தியாவில் நடக்கும் தேர்தல் நடைமுறைகளை பார்த்து உலகமே வியப்புடன் பார்க்கிறது.  நாட்டில் எந்தவிதமான தவறுகள் நடந்தாலும், வாக்களிக்க முடியாதவர்கள் அதற்கு கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும். நான் வாக்களிக்கவில்லை, தேர்தல் நாளில் நான் வாக்களிக்கும் இடத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்தால், அதன் விளைவு நம்முடைய நாடுதான் பாதிப்படையும்.  என்று பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது 52ஆவது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை வைத்தார். இதில் பேசிய அவர்,”21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதன்முறையாக வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.. தகுதியுள்ள ஒவ்வொருவரும் தங்களை வாக்காளர்களாக அங்கீகரித்துக் கொள்ளவேண்டும்.  வாக்குரிமை சரியாக பயன்படுத்துவது என்பது நம் வாழ்க்கை யின் மிக முக்கிய கடமையாகும். அது புனித செயலாகும். ஆகையால், அதை தவறாமல் மேற் கொள்ளவேண்டும். அதை செய்ய தவறிவிட்டால், அதற்கு நீங்கள் வருந்தவேண்டும்” என்று தெரிவித்தார்.

”மக்கள் அனைவரும் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணரவேண்டும். மக்களிடம் அந்த விழிப்புணர்வை பரப்ப புகழ்பெற்ற பிரபலங்கள் முன்வர வேண்டும். அவர்களிடம் வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவு குறித்து விளக்கவேண்டும்

எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வாக்களிக்க தகுதியுள்ள இளைய நண்பர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை மேலும் வலுபடுத்து வார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,”கடந்த 1950 ஜனவரி 25 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பணி மற்றும் திறமைகளை பார்த்து ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்படுவது இயற்கையே. ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல் நடைமுறைகளை பார்த்து உலகமே வியப்புடன் பார்க்கிறது” என்று பெருமையுடன் கூறினார்.

மேலும் ”கடந்த ஜனவரி 24ஆம் தேதி மாணவர்களால் உருவாக்கப்பட்டது “கலாம் சாட்” விண்ணிற்கு செலுத்தப்பட்டது. ஒடிசா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சவுண்டிங் ராக்கெட்டுகளும் பல சாதனைகளை புரிந்துள்ளன. நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014ஆம் ஆண்டுவரை விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ராக்கெட்டுகளின் எண்ணிக்கை கடந்த 4ஆண்டுகளில் செலுத்தப்பட்டதற்கு இணையாக உள்ளது. விரைவில் சந்திராயன் 2 நிலாவுக்கு அனுப்ப உள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.