March 27, 2023

மான் கி பாத்-துக்கு இப்ப இடைவேளை: மறுபடியும் பேச வருவேன்! – மோடி நம்பிக்கை!

ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா. அடுத்த இரு மாதங்கள், நாங்கள் தேர்தலில் பர பரப் பாக இயங்குவோம். நானும் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். அதனால், 2 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது என்று கூறிய பிரதமர் மோடி, ஆனாலும் மே மாதம் மான் கி பாத் நிகழ்ச்சியில் தான் மீண்டும் வருவதாக உறுதியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மான் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபரில் ஞாயிற்றுக்கிழமை, முதன் முதலாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் 53ஆவது மன் கி பாத் உரை இன்று ஒலிப்பரப்பானது.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இன்று கனத்த இதயத்துடன் உரையை துவக்குகிறேன். 10 நாளுக்கு முன், நமது தேசம் தைரியமான 40 வீரர்களை இழந்துள்ளது. புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டு மக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

”நமது ராணுவம் எப்போதும், தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதியை நிலை நாட்டுகின்றனர். மறுபுறம் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலடி கொடுக்கின்றனர். வீரர்களின் உயிர்த்தியாகம், பயங்கரவாதிகளின் அடிப்படை தளத்தை தகர்த்து எறியும்.

துணிச்சலான வீரர்களின் உயிர் தியாகம், நாடு முழுவதும் நம்பிக்கையையும், வலிமையையும் ஏற்படுத்தும். வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும்.

தேசிய போர் நினைவகம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இந்தியா கேட் மற்றும் அமர் ஜவான் ஜோதி பகுதிகளில் புதிய தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய நினைவகம், இந்தியா கேட் மற்றும் அமர்ஜவான் ஜோதி இடையே அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவகம், தைரியமிக்க நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருக்கும். இந்த நினைவகம் நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

”பள்ளி தேர்வுகளுக்கான நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் சில வாரங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாக தேர்தல்கள் இருக்கும். பொதுத்தேர்தல் வரவுள்ளதால், அடுத்த 2 மாத காலங்களுக்கு அனைவரும் பிஸியாக இருப்போம். வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தேர்தல் வர இருப்பதால் 2 மாதங்களுக்கு பிறகுதான் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச முடியும். இதற்கு பிறகு மே 26ஆம் தேதி தான் மன் கி பாத் நிகழ்ச்சி இருக்கும்” என்று தெரிவித்தார்.

அத்துடன் ”பல ஆண்டுகளுக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உங்களை தொடர்பு கொள்வது எனக்கு தனித்துவமிக்க அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான குடும்பங்களை மன் கி பாத் மூலம் நான் தொடர்பு கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.