தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் _ இந்தியாவில் அமலானது!

தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் _ இந்தியாவில் அமலானது!

ம் நாட்டில் ஆண்டுதோறும் 700 டன் முதல் 800 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் உலக அளவில் தங்கத்தை ஆபரணமாக பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதனால் ஆண்டுதோறும் இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இந்நிலையில் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் ஜூன் 16-ம் தேதியான இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறை மூலம் தரம் குறைந்த தங்க நகைகளை விற்பது முற்றிலும் நிறுத்தப்படும், தங்க நகைகளை வாங்கும் மக்கள் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு கூறி உள்ளது. 2021 ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று 2019 நவம்பரில் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் கோவிட் நெருக்கடியை கருத்தில் கொண்டு பல முறை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகை கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பி.ஐ.எஸ்.) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை கொண்டு வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம்.இதன்படி ஹால்மார்க்கிங் சென்டர்கள் (hallmarking centers) ஏற்கனவே இருக்கும் நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய தங்க ஹால்மார்க்கிங் முதற்கட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. தங்கம் உருக்கி நகைகளாக உருவாக்கப்படும் போது எளிதில் உடையாமல் இருக்க அதனுடன் சேர்த்து ஏதேனும் உலோகம் கலக்கப்பட்டு தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் வாங்கும் நகைகளில் எவ்வளவு சதவீதம் ஒரிஜினல் தங்கம் இருக்கிறது, எவ்வளவு உலோகம் கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்கு சான்றளிக்கும் செயல்முறையே ஹால்மார்க்கிங் ஆகும்.

உலகளவில் தங்கத்தை அதிகம் வாங்குபவர்களில் இந்தியர்கள் மிக அதிகம். எனவே தங்க நகைகளின் தரத்தை கண்காணிக்க கடந்த 2000-ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரையிடும் நடைமுறை செயலில் உள்ளது. நாம் வாங்கும் தங்கத்தினுடைய தூய்மை குறித்து ஒரு உறுதியான உத்தரவாதத்தை நமக்கு அளிக்கிறது ஹால்மார்க்கிங். நகை விற்பனையாளர்களிடம் இருந்து நாம் வாங்கும் தங்க நகைகள் அல்லது தங்க நாணயத்தில் BIS அடையாளம் இருந்தால், அது இந்திய தரநிலை பணியகத்தால் (BIS) நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஒத்து போகிறது என்று அர்த்தமாகும்.

இதனிடையே நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான தொழில் பங்குதாரர்களின் கூட்டத்தில் தங்க நகைகளில் BIS ஹால்மார்க் முத்திரை இனி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) மற்றும் அகில இந்திய நகைக்கடை மற்றும் கோல்ட்ஸ்மித் கூட்டமைப்பு (AIJGF) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்படி இன்று முதல் முதற்கட்டமாக நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய தங்க ஹால்மார்க்கிங் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் ஏற்கனவே ஹால்மார்க்கிங் சென்டர்கள் இருக்கும் 256 மாவட்டங்களில் உள்ள நகைக்கடை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஹால்மார்க்கிங் செய்ய கூடுதல் 20, 23 மற்றும் 24 காரட் தங்கமும் அனுமதிக்கப்படும். நகை வியாபாரிகள் தங்களிடம் உள்ள பழைய ஸ்டாக்குகளில் ஹால்மார்க்கிங் பெற செப்டம்பர் 1ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத கால இடைவெளியில் எந்தவொரு வணிகருக்கும் எதிராக எந்த அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.

இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல், “வாடிக்கையாளர்களின் சிறந்த பாதுகாப்பு மற்றும் திருப்திக்கான மத்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து, 2021 ஜூன் 16 முதல் (இன்று முதல்) 256 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க்கிங் செயல்படுத்தப்படும். நகை விற்பனையாளர்களுக்கு ஆகஸ்ட் 2021 வரை அபராதம் விதிக்கப்படாது. இந்த முயற்சி இந்தியாவை ஒரு முன்னணி உலகளாவிய தங்க சந்தை மையமாக வளர்க்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!