கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் கைது: மத்திய அரசைக் கண்டித்து மம்தா தர்ணா!
மேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையர் இல்லத்தில் ”ஜனநாயகத்தை காப்போம்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனால், இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் சுக்லா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும், கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி முதல் மந்திரி மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ சேனல் அருகே தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரும் பங்கேற்றார்.
இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்களை கைது செய்யவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இணை கமிஷனர் பிரவின் திரிபாதி கூறுகையில், ‘ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக வந்திருப்பதாக மட்டுமே அவர்கள் (சி.பி.ஐ. அதிகாரிகள்) தெரிவித்தனர். அது என்ன மாதிரியான நடவடிக்கை என எங்களுக்கு தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு விட்டுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.