அமெரிக்காவில் காந்தி சிலை சேதம் – இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம் – இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சிதைத்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் டாவிஸ் நகரில் உள்ள சென்ட்ரல் பார்கில் காந்தி சிலை நிறுவப் பட்டு உள்ளது. இந்த வெண்கலச் சிலை 6 அடி உயரமும், 294 கிலோ எடையும் கொண்டது. சிலையில் காந்தியின் கால் பகுதி அறுத்து எடுக்கப்பட்டு, முகத்தில் ஒரு பகுதி சிதைக்கப்பட்டும் இருக்கிறது. சிலை அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது. சிலை சிதைக்கப்பட்டு இருப்பதை கடந்த 27ம் தேதி பணியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த சிலையை யார், எப்போது சிதைத்தனர் என்பது தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலை அமைந்துள்ள டேவிஸ் நகர மக்கள் கலாச்சார அடையாளமாக காந்தியைப் பார்ப்பதாகவும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்திய அரசால் இந்த காந்தியின் சிலை டேவிஸ் நகரத்துக்கு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிலை நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட போது இந்திய எதிர்ப்பு குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவின் சிறுபான்மையினருக்கான அமைப்பு (ஓ.எப்.எம்.ஐ) சிலையை அகற்றக் கோரி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாக கூறப் படுகிறது. மேலும், காந்தி சிலை சிதைக்கப்பட்ட செய்தியை காலிஸ்தான் ஆதரவு அமைப்பு வரவேற்று dவிட்டரில் பதிவிட்டு உள்ளது.

அதே சமயம் காந்தி சிலை சிதைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘உலக அளவில் அமைதி மற்றும் நீதிக்கான அடையாளமாக கருதப்படுபவருக்கு எதிரான இந்த தீங்கிழைக்கும், வெறுக்கத்தக்க செயலை இந்திய அரசாங்கம் கடுமையாக கண்டிக்கிறது‘, என கூறியுள்ளது.

வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டு இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைவாக கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!