April 2, 2023

கொரொனா : தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் &, ராணி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வின் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்தாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவின் பாதிப்பால் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் மலேசிய அரண்மனையில் 7 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் மன்னரும், ராணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய அரண்மனை தரப்பில், “அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு கோவிட் தொற்று ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிட்-19 காய்சலுக்கு மலேசியாவில் சுமார் 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.